
யாழ். – பருத்தித்துறையில் கொட்டடி மற்றும் முனை ஆகிய இரு கிராமங்களைச் சேர்ந்த சிலருக்கு இடையே ஏற்பட்ட மோதல் இரண்டு கிராமங்களுக்கு இடையிலான மோதலாக மாறியுள்ளது.
இரண்டு கிராம மக்களும் மோதிக் கொண்டதில் பலர் காயமடைந்துள்ளதுடன், அப் பிரதேசங்களில் தரித்து நின்றிருந்த வாகனங்களும் அடித்து சேதமாக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களில் ஐவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இரண்டு கிராம மக்களும் மோதலில் ஈடுபட்டதால் அப்பிரதேசத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது .
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக பருத்தித்துறைப் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்தபோதும் மோதலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இரு கிராமங்களுக்கு இடையே மோதல் நிலமைகள் நீடித்ததால் இராணுவத்தினர் களமிறக்கப்பட்டனர். இதன் பின்னர் மோதல் சம்பவம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
முன்னைய பகை ஒன்றை மதுபோதையில் சிலர் பெரிதுபடுத்தியதால் இந்த மோதல் இடம்பெற்றதென பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Leave a Reply