
தமிழகத்தில் மனைவியையும், மகளையும் பேராசிரியர் ஒருவர் கிணற்றில் தள்ளிவிட்ட நிலையில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
பெரம்பலூரை சேர்ந்த சரவணன், அன்பரசி தம்பதிக்கு 5 வயதில் தனுஷ் காஸ்ரீ, மற்றும் 2 வயதில் மேகனாஸ்ரீ என இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர்.
கணவன் மனைவி இருவருமே கல்லூரியில் பேராசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் புதன்கிழமை இரவு இவர்களது வீட்டின் பின்புறமுள்ள கிணற்றுக்குள் இருந்து அன்பரசியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஒடி வந்தனர்.
அங்கு அன்பரசியும், குழந்தையும் தண்ணீரில் கிடப்பதை பார்த்த அவர்கள் அதிர்ச்சியடைந்தனர், பின்னர் அன்பரசியை மட்டும் மீட்க முடிந்த நிலையில், குழந்தை மேகனாஸ்ரீயை மீட்க முடியவில்லை. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், நீண்ட நேரம் போராடி குழந்தையின் சடலத்தை மீட்டனர்.
விசாரணையில் பொலிசாரிடம் அன்பரசி கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருமணமாகி இரண்டுமே பெண் குழந்தைகளாக பிறந்ததால் கணவர் சரவணன், மாமியார் மற்றும் நாத்தனார் உள்ளிட்டோர் தன்னை தொடர்ந்து அடித்து கொடுமைப் படுத்தி வந்ததாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் கணவன் சரவணன் அதே கல்லூரியில் பணிபுரியும் வேறொரு பெண்ணுடன் தவறான தொடர்பில் இருந்ததாகவும் கூறியுள்ளார் அன்பரசி.
இருவரது உறவுக்கு இடையூறாக இருந்ததால் தம்மை கொல்ல திட்டமிட்ட கணவர், குடிபோதையில் குழந்தையோடு சேர்த்து கிணற்றில் தள்ளியதாக அன்பரசி கூறினார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் சரவணன் மற்றும் குடும்பத்தாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply