ரி-20 உலகக் கிண்ண தொடரில் பந்துவீச தயாராகும் மெத்தியூஸ்!

அவுஸ்ரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ரி-20 உலகக் கிண்ண தொடரில் பந்துவீச தயாராகிக் கொண்டிருப்பதாக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரரான அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் துடுப்பாட்டத்துக்கான அதிக பளுவை சுமக்க நேரிட்டுள்ளதால் பந்துவீசுவதை தவிர்த்துள்ளேன். எனினும், நியூசிலாந்துடளான சுற்றுப்பயணத்தின் பிறகு ரி-20 போட்டிகளில் பந்துவீச வேண்டும் என தேர்வாளர்கள் கேட்டுக் கொண்டனர். எனவே நான் ரி-20 போட்டிகளில் மீண்டும் பந்துவீச எண்ணியுள்ளேன்.

கடந்த சில மாதங்களாக அதற்கான வலைப் பயிற்சிகளிலும் ஈடுபட்டேன். நிச்சயம் அடுத்த வருடம் அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ரி-20 உலகக் கிண்ண தொடருக்கு தெரிவாகினால் பந்துவீசுவேன். அழுத்தம் என்பது எந்தப் போட்டியில் விளையாடினாலும் இருக்கும். ஆனால் சிரேஷ்ட வீரர் என்ற வகையில் எப்போதும் அழுத்தம் தான் இருக்கும். அது காலத்துக்கு காலம் வித்தியாசப்படும். குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தனவின் காலத்தில் நாங்கள் இளம் வீரர்களாக இருந்தோம். இதனால் அவர்கள் பல்வேறு ஆலோசனைகளைக் கொடுத்தனர்.

தற்போது அந்தப் பொறுப்பு எம்மீது சுமத்தப்பட்டுள்ளது. எனவே சிரேஷ்ட வீரராக அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு எனது அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்க தயாராக உள்ளேன். கடந்த சில டெஸ்ட் போட்டிகளில் நான் 4 ஆவது இலக்கத்தில் களமிறங்கி வருகிறேன். இதற்கு முன் 5 ஆவது அல்லது 6 ஆவது இலக்கங்களில் தான் நான் விளையாடி வந்தேன். எனவே முன்வரிசை வீரராக துடுப்பாட கிடைத்தமை மிகப் பெரிய வாய்ப்பாக உள்ளதுடன், நல்லதொரு ஆரம்பத்தைப் பெற்று அணிக்காக ஓட்டங்களைக் குவிக்க எதிர்பார்த்துள்ளேன்.

அதேபோல, கடந்த வருடம் நியூசிலாந்து அணிக்கு எதிராக சதமடித்ததன் பிறகு துரதிஷ்டவசமாக உபாதைக்கு உள்ளாகினேன். இதனால் அவுஸ்ரேலிய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுடனான போட்டித் தொடர்களில் பங்குபற்ற முடியாமல் போனது. எனவே இனிவரும் காலங்களில் சிறந்த ஆரம்பத்தைப் பெற்றால் அணிக்காக ஓட்டங்களைக் குவிப்பேன்.

உலகக் கிண்ணப் தொடரில் வெற்றி பெறுவது தான் அனைவரதும் எதிர்பார்ப்பாகும். சுமார் 8 மாதங்கள் பந்துவீசாமல் இருந்துவிட்டு உடனடியாக அணியின் தேவைகருதியே பந்துவீசத் திர்மானித்தேன். எனவே உபாதைக்குள்ளாகினாலும் பரவாயில்லை என்று திமுத்திடம் கூறிவிட்டு தான் பந்துவீசினேன். அதற்கான தக்க பலனும் கிடைத்தது.

இம்முறை இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ணப் தொடரில் உங்களுக்கு பந்துவீச வேண்டாம். துடுப்பாட்ட வீரராக விளையாடும்படி தேர்வாளர்கள் அனுமதி வழங்கினர். நான் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பந்துவீசுவதில்லை. நியூசிலாந்துடனான போட்டித் தொடரின் பிறகு தேர்வாளர்கள் என்னை அழைத்து ரி-20 போட்டிகளில் பந்துவீச வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

எனவே அவர்களது வேண்டுகோளுக்கு என்னால் மறுப்பு தெரிவிக்க முடியாது. எனவே இனிவரும் காலங்களில் ரி-20 போட்டிகளில் நான் பந்துவீசவுள்ளேன். கராச்சி டெஸ்ட் போட்டிக்காக வலைப் பயிற்சிகளில் ஈடுபட்டு இருந்த போது நான் பந்துவீச்சு பயிற்சிகளையும் முன்னெடுத்தேன். உடனடியாக பந்துவீசுவதென்பது கடினமாக உள்ளது. எனினும், எதிர்வரும் காலத்தில் ரி-20 அணிக்குத் தேர்வாகினால் நிச்சயம் பந்துவீசுவேன். தற்போது என்னால் பந்துவீச முடியும். ஆனால் உபாதை ஏற்படும் அச்சம் இருந்தால் அணித் தலைவர் மற்றும் தேர்வாளர்களுக்கு தெரியப்படுத்துவேன். எனினும், தற்போதுள்ள நிலைமையில் என்னால் ரி-20 போட்டிகளில் பந்துவீச முடியும்.

கடந்த சில மாதங்கள் எனக்கு சிறிது ஓய்வு கிடைத்தது. இதனால் எனது உடல்தகுதி குறித்து அதிக கவனம் செலுத்தினேன். தற்போது நான் 7 கிலோ கிராம் எடையைக் குறைத்துள்ளேன். என்னைப் பொறுத்தமட்டில் அணியை கட்டியெழுப்புவது முதல் வீரர்களை சரியான முறையில் இனங்காண்பது வரை பயிற்சியாளர்களுக்கு தான் பொறுப்பு உண்டு. உண்மையில் அந்தப் பொறுப்பை மிக்கி ஆர்தர் சிறப்பாக செய்து வருகின்றார். எனவே எதிர்காலத்தில் அவர் இலங்கை கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார் என நம்புகிறேன்.

நான் நிறைய விடயங்களை தலையில் போட்டுக் கொள்ளவில்லை. எனக்கு கிடைக்கின்ற ஒவ்வொரு போட்டித் தொடரிலும், ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாட வேண்டும் எள்று தான் நினைப்பேன்.  டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக இவ்வளவு ஓட்டங்களைத் தான் குவிக்க வேண்டும் என நான் சிந்திக்கவில்லை. எனினும், ஒவ்வொரு வீரருக்கும் இலக்குகள் இருக்கத் தான் வேண்டும். டெஸ்ட் அரங்கில் 10 ஆயிரம் ஓட்டங்களைக் கடக்க வேண்டும் என்பதுதான் எனது இலக்காகும். அதற்கு முன் எனது உடல்தகுதியை நல்ல முறையில் வைத்துக் கொள்ள மிக அவதானத்துடன் இருக்கிறேன். அதற்காக தொடர்ந்து பயிற்சிகளை எடுத்து வருகிறேன்” என கூறினார்.


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *