விமானம் விபத்துக்குள்ளாகும் என தெரியும்: உயிர் தப்பியவர்களின் பதைபதைக்க வைக்கும் கடைசி நொடிகள்

கஜகஸ்தான் நாட்டில் கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளான பயணிகள் விமானமானது விபத்தில் சிக்கும் என்பதை ஏற்கெனவே உணர்ந்ததாக உயிர் தப்பிய பயணிகள் சிலர் வெளிப்படுத்தியுள்ளனர்.

கஜகஸ்தான் நாட்டில் 14 பேரின் உயிரைப் பறித்த Bek Air விமானமானது 2 மாடி கட்டிடத்தில் மோதி விபத்தில் சிக்கியது.

விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து காயங்களுடன் 8 சிறார்களை மீட்பு குழுவினர் இதுவரை மீட்டுள்ளனர்.

95 பயணிகள் மற்றும் 5 விமான ஊழியர்களுடன் புறப்பட்ட இந்த விமானமானது விபத்தில் சிக்க இருப்பது தங்களுக்கு தெரியும் என உயிர் தப்பிய பயணிகள் பலர் வெளிப்படுத்தியுள்ளனர்.

விபத்தில் சிக்கிய பின்னர் சமூக ஊடகங்கள் வாயிலாகவே உதவிக்கு அழைப்பு விடுக்க நேர்ந்ததாகவும், விபத்துக்கு பின்னர் எந்த நேரமும் வெடித்துவிடும் அபாயம் இருந்ததாகவும் பயம் விட்டு விலகாமல் உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

விமான ஓடுதளத்தில் இருந்து குறித்த விமானம் மேலெழும்பிய சில நொடிகளிலேயே ராடாரில் இருந்து மாயமானதாகவும், அடுத்த சில நிமிடங்களில் கட்டிடத்தில் மோதி விபத்தில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.

விமானம் மேலெழும்பியதும், திடீரென்று மொத்தமாக குலுங்கியதாகவும், அதன் பின்னர் கட்டிடத்தில் பலமாக மோதும் சத்தமே கேட்டது என ஒரு பயணி தெரிவித்துள்ளார்.

விமானம் முழுவதும் மரண ஓலம் கேட்டதாகவும், அவசர வாசலை யாரோ உடைக்க, அதுவழியாக தப்பியதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்கு பின்னர் சுமார் 20 நிமிடங்களுக்கு பின்னரே, மீட்பு குழுவினரின் ஒரு வாகனம் சம்பவ பகுதிக்கு வந்துள்ளதாகவும்,

ஆம்புலன்ஸ் சேவை, மருத்துவ உதவி என எதுவும் உடனடியாக தங்களுக்கு கிடைக்கவில்லை என காயமடைந்த பலரும் புகார் தெரிவித்துள்ளனர்.

பலரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களையே அவசர உதவி கேட்டு அழைக்க பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் மொத்தம் 35 பேர் காயமடைந்துள்ளதாகவும், 82 பேர் உயிர் தப்பியதாகவும் 14 பேர் மரணமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *