
ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட, புதிய கூட்டணியை அமைப்பதற்கான அடித்தளத்தை அமைத்துள்ளார்.
கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சி தலைமை பிரச்சினைக்கு வழிவகுக்க மறுத்த நிலையில், பிரேமதாச ஒரு புதிய, பரந்த கூட்டணியை உருவாக்க முடிவு செய்திருந்தார் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் குறித்த பரந்துபட்ட கூட்டணி தற்போது 95% உறுதிப்படுத்தப்பட்டதாகவும், ஜனவரி தொடக்கத்தில் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றும் ஹரின் பெர்னாண்டோ கூறினார்.
மேலும் புதிய கூட்டணியில் இணைவதற்கு ஐக்கிய தேசிய முன்னணியின் சில பங்காளி கட்சியிகளின் உறுப்பினர்களுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு கட்சியின் தலைமை பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க விலகவில்லை என்றால் பெரும்பாலான உறுப்பினர்கள் பிரிந்து சென்று புதிய கூட்டணியில் இணைவார்கள் என்றும் இதுவே அவர்களது நிலைப்பாடு எனவும் ஹரின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, கடுமையான வாதபிரதிவாதங்களை அடுத்து, பிரேமதாசவை புதிய எதிர்க்கட்சித் தலைவராக பெயரிட விக்கிரமசிங்க ஒப்புக் கொண்டார். அதன்பிரகாரம் அவர் ஜனவரி 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடாளுமன்றம் கூடும்போது புதிய எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படுவார்.
இருப்பினும், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதற்காகு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என்றும் பிரேமதாச கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply