நெடுந்தீவு கடற்கரையில் மர்மப் படகில் வந்திறங்கியவர்கள் யார்? தீவிர சோதனை

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்கரையில் மர்மப் படகில் வந்து இறங்கியவர்கள் காணாமல்போனமை தொடர்பாக அப்பகுதியில் உள்ள வீடுகளில் தீவிர சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது

குறித்த வீடுகள் இராணுவம் மற்றும் கடற்படையினரால் சோதனையிடப்பட்டதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் கடந்த 26ஆம் திகதி இந்தியாவில் இருந்து வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் படகு ஒன்று மீட்கப்பட்டதுடன் அந்தப் படகில் நான்கு பேர் வந்திறங்கியுள்ளனர் என புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. எனினும் அவ்வாறு வந்து இறங்கியவர்கள் யார்?, எங்கிருந்து வந்தனர் என இன்று வரை பாதுகாப்பு தரப்பினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

யாழ்ப்பாணத்தில் இருந்து தனித் தீவாக அமைந்துள்ள நெடுந்தீவில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் யாழில் இருந்து நெடுந்தீவு செல்வோர் மற்றும் அங்கிருந்து யாழ்ப்பாணம் வருவோர் தொடர்பாக பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் நெடுந்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிப்பவர்கள் இறங்கு துறையில் வைத்து அவர்களது விபரங்கள் பதியப்பட்டு, அடையாள அட்டை ஊடாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே கடற்படையினரால் அனுமதிக்கப்படுகின்றனர்.

மர்மப் படகில் வந்தவர்கள் இந்தியாவில் உள்ள ஈழ அகதிகளா அல்லது பயங்கரவாத செயல்களுடன் தொடர்புடையவர்களா? அல்லது கடத்தல்காரர்களா? என பல கோணங்களில் முப்படையினரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அவ்வாறு படகில் வந்து இறங்கியவர்கள் என சந்தேகிக்கும் நான்கு பேரையும் தேடும் நடவடிக்கைகள் முப்படையின் ஊடாக இடம்பெற்று வருகின்றன. இதனால் நெடுந்தீவில் கடந்த இரு நாட்களாக பரப்பப்பான சூழ்நிலை காணப்படுகின்றது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *