
கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை சிறைச்சாலை வைத்திசாலைக்கு மாற்ற முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை வைத்தியர்களின் ஆலோசனைக்கமைய தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
வெள்ளை வேன் குறித்த ஊடக சந்திப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் பாதுகாப்புடன் நாரஹேன்பிட்ட தனியார் வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
இந்நிலையில் சிறைச்சாலை வைத்தியர் ஒருவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்று மருத்துவ சோதனைக்குட்படுத்திய பின்னர் அவரை இங்கிருந்து வேறொரு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லமுடியும் என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் அவ்வாறு அழைத்துச் செல்வதற்கு முன்னர் ராஜிதவுக்கு சிகிச்சையளித்து வரும் வைத்தியர்களின் அனுமதியையும் பெறவேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ராஜிதவை அழைத்துச் செல்வதற்காக பிற்பகல் 12 மணியளவில் அம்புலன்ஸ் வாகனத்துடன் சிறைச்சாலை அதிகாரிகள் சென்றிருந்தனர்.
இதன்போது ராஜிதவை பார்வையிட்ட முன்னாள் அமைச்சர்களான கபீர் ஹசிம் மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோர் ராஜிதவுக்கு தொடர்ந்தும் சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
பிற்கல் 4.30 மணியளவில் சிறைச்சாலையின் உயர் அதிகாரியொருவர் வருகை தந்ததுடன், அவர் வைத்தியசாலையில் ராஜித சிகிச்சை பெற்றுவரும் பிரிவுக்கு சென்று சுமார் அரை மணித்தியாலத்துக்கு பின்னர் வெளியேறினார். அவர் ராஜிதவை இன்று வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லவில்லை என்று தெரிவித்தார்.
பின்னர் ராஜிதவை அழைத்து செல்வதற்காக வந்திருந்த அம்பியூலன்ஸ் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளும் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினர்.
Leave a Reply