
இலங்கையில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி நள்ளிரவுடன் ஜனநாயக ஆட்சி செத்துவிட்டது. ஆனால், நீதித்துறை இன்னமும் சாகவில்லை.
அதனால் ராஜபக்ச குடும்ப அரசின் அரசியல் பழிவாங்கல்களால் மனம் தளராமல் கொண்ட கொள்கையில் உறுதியுடன் செயற்படுங்கள் என முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசியல் பழிவாங்கல் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கிய முன்னாள் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன ஆகியோரிடமே இவ்வாறு ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்,
மீண்டும் சர்வாதிகாரப் போக்கில் செல்லும் ராஜபக்சக்களின் சர்வாதிகார ஆட்சிக்கு விரைவில் முடிவு கட்டுவோம். இந்த அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் பதிலடி கொடுக்கும்.
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சியில் நீதித்துறையில் நிறைவேற்று அதிகாரத்தின் தலையீடு இருந்தது. அன்று நீதித்துறை மரணித்து இருந்தது என்றுதான் சொல்ல முடியும்.
ஆனால், தற்போதைய கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஆட்சியில் நீதித்துறை இன்னமும் உயிர்ப்புடன் தான் இருக்கின்றது. அதில் இந்த அரசு இன்னமும் கை வைக்கவில்லை.
கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக நாம் நிலைநாட்டிய ஜனநாயக ஆட்சியை இல்லாதொழித்து ஜனநாயக விரோத ஆட்சிக்கு, சர்வாதிகார ஆட்சிக்கு காட்டாட்சிக்குப் புத்துயிர் கொடுத்த ராஜபக்ச அணியினரின் பயணம் நெடுநாள் நீடிக்காது.
பொதுத் தேர்தலுடன் அவர்களின் ஆட்டங்கள் அனைத்தும் முடிவுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply