
ரஜினி துவங்க இருக்கும் கட்சியுடன் கூட்டணி அமைக்க தேசிய கட்சி மும்முரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்க உள்ளதாக பலமுறை தகவல்கள் வெளிவந்து அதற்கான செயல் திட்டங்கள் தொடங்கவில்லை. இந்நிலையில், 2017ஆம் ஆண்டு ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்து கட்சி துவங்க உள்ள திட்டத்தை அறிவித்தார்.
அவர் அறிவிப்பு வெளியிட்டு இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், கட்சியின் பெயரோ திட்டமோ அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், பாஜக ரஜினியை தனது பக்கத்தில் இழுத்து தமிழகத்தில் காலூன்ற பலமாக நினைத்தது. ஆனால், சமீபத்தில் ரஜினி அளித்த பேட்டி ஒன்றி பாஜகவின் கூட்டணி நிச்சயம் இல்லை என்று பகிரங்கமாக தெரிவித்தார். அதில் தன்மீது காவி சாயம் பூச நினைப்பதாகவும். அது முற்றிலும் தவறு என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், நடிகர் கமல்சானின் திரைபயணம் தொடங்கி 60ஆண்டுகள் கடந்த நிலையில் அதற்கான விழாவில், ரசிகர்கள் தெரிவித்திருந்த ரஜினி கமல் இணைப்பு குறித்து ரஜினிகாந்த் பேசினார். அதில் குறிப்பிட்ட ரஜினி தேவைப்பட்டால் நிச்சயம் தமிழக அரசியலில் இணைந்து பயணிப்போம் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு திமுகவுடன் உள்ளாட்சி தேர்தல் தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டது. இதனால், பல காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதை சாதகமாக்கி ரஜினி துவங்கும் கட்சியில் காங்கிரஸ் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள காங்கிரஸ் நிர்வாகிகள், ரஜினிக்கு காங்கிரஸ் கட்சியில் ப.சிதம்பரம் உள்ளிட்ட ஏராளமான நண்பர்கள் உண்டு. கர்நாடகம், மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ரஜினியோடு பேசி வருகிறார்கள்.
ஏ.கே.அந்தோனி, மராட்டியத்தில் சுப்ரியா சுலே போன்றவர்கள் ரஜினியோடு பேசி பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியில் இருக்கும் ரஜினியின் நண்பர்கள் ரஜினி என்றால் மதங்களைக் கடந்த ஆன்மிகவாதி என ஒரு நற்பெயர் உள்ளது. அதன் அடிப்படையில் காங்கிரஸோடு நீங்கள் சேர வேண்டும்.
நீங்கள் சம்மதித்தால் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியே வரும். காங்கிரஸ் வருவதாக இருந்தால் தி.மு.க. கூட்டணியில் இருந்து மேலும் சில கட்சிகளும் கூட வரலாம்.
காங்கிரஸின் தேசியம் தான் இப்போது உங்களுக்குச் சரியாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். வழக்கம்போல் ரஜினி எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு, பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறார்.
சில நாட்களுக்கு முன் ரஜினியை கடுமையாக விமர்சித்த உதயநிதி சில கருத்துகள் வெளியிட்டார். இது குறித்து ரஜினி எந்த கருத்தும் வெளியிடவில்லை. ஆனால், அவர் கடும் கோவத்தில் இருப்பதாக கூறப்படுகின்றது.
திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸைக் கழற்றிவிட்டால் திமுகவின் பலம் குறையும் என்ற கணக்கும் ரஜினி வட்டாரத்தில் பேசப்படுகிறது. ரஜினி கட்சி தொடங்கும் சமயத்தில் இது அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
Leave a Reply