
வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பி.எஸ்.எம்.சார்ள்ஸ், எதிர்வரும் 2ஆம் திகதி தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார்.
இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான பி.எஸ்.எம்.சார்ள்ஸ், வடக்கு மாகாண ஆளுநராக நேற்று ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில், கடமைகளை பொறுப்பேற்பது குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், நாளை மறுதினம் (வியாழக்கிழமை) தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவித்தார்.
சுகாதாரம், சுதேச மருத்துவத் துறை அமைச்சின் செயலாளராகவும் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ள அவர், மட்டக்களப்பு மற்றும் வவுனியா மாவட்டங்களின் அரசாங்க அதிபராக நீண்டகாலம் சேவையாற்றியுள்ளார்.
எட்டு மாகாணங்களுக்கான ஆளுநர்கள் முன்கூட்டியே நியமிக்கப்பட்ட நிலையில், வட மாகாண ஆளுநர் பதவிக்கான நியமனம் இழுபறி நிலையில் காணப்பட்ட நிலையில் இவர் வடக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பி.எஸ்.எம்.சார்ள்ஸ், வடக்கு மாகாணத்தின் முதலாவது பெண் ஆளுநர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply