
எங்களது 5 வருட ஆட்சி காலத்தில் யாருமே நினைத்து பார்க்காத சிறந்த சேவைகளை மக்களுக்கு செய்வோமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிரசன்ன ரணதுங்க மேலும் கூறியுள்ளதாவது, “ஒருமாத காலத்தில் பொருட்களின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அத்துடன் தொடர் குண்டுத் தாக்குதலின் காரணமாக பாதிப்படைந்திருந்த சுற்றுலாத்துறை போன்ற ஏனைய தொழில்களை ஊக்குவிப்பதற்கு தேவையான செயற்பாட்டினையும் முன்னெடுத்துள்ளோம்.
இந்த ஒரு மாத காலத்திலேயே இவைகளை செய்துள்ளோம். எனவே நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் பௌத்த மதம் இல்லாத ஒரு அரசாங்கத்தை அமைத்துள்ளோம்.
நாடாளுமன்றத்தில் இன்னும் முறையாக எந்ததொரு செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை. பொதுமக்களுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மட்டுமே இன்னும் நடைபெற்று வருகின்றன.
நாடாளுமன்ற தேர்தலின் வெற்றியுடன் மக்கள் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கான பின்னணியை இது உருவாக்கும். மக்களுக்கு சேவை வழங்குவதற்காக கிராம சேவகர் பிரிவுக்கு அதிகளவான நிதியை ஒதுக்கவுள்ளோம்.
அதேபோன்று ஜனவரி மற்றும் பெப்ரவரிக்குள் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்.
குறுகிய காலத்தில் சிறப்பான செயற்பாடுகளை செய்துள்ளோம். அந்தவகையில் 5 வருடங்கள் செல்லும்போது, இதனை விட சிறந்த பாரிய செயற்றிட்டங்களை முன்னெடுப்போம்.
பொருட்களின் விலையை அதிகரித்தது கடந்த அரசாங்கம் தான். எனவே நாம் ஆட்சிக்கு வந்தவுடனே அனைத்து பொருட்களின் விலையை குறைப்பது கடினம்.
மேலும் கடந்த அரசாங்கத்தின் வினைத்திறனற்ற செயற்பாட்டின் காரணமாகவே தற்போது நாடு பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்த நிலையில் காணப்படுகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply