
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் எந்த சின்னத்தின் கீழ் போட்டியிடுவது என்பது குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளதாக சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து இதுவரையில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் எதிர்வரும் நாட்களில் இது குறித்து கலந்துரையாடப்படும் என தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவார் எனவும் இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் மொட்டு சின்னத்தின் கீழேயே போட்டியிட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர்.
எனினும் இதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர்கள் தொடர்ச்சியாக கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது அமைக்கப்பட்டிருந்த தேர்தல் கூட்டணியின் ஆரம்பத்தில், நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் கதிரை சின்னத்தின் கீழ் போட்டியிடுவது குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply