
அமெரிக்கா-ஈரான் இடையே போர் பதற்றம் அதிகமாகி வரும் நிலையில் இரு நாடுகளுக்கிடையே அப்படி என்ன தான் பிரச்சனை? என்பது குறித்து பார்ப்போம்.
ஈரான் தளபதி குவாசிம் சுலைமானை அமெரிக்க ஏவுகணை தாக்குதல் மூலம் கொன்றதால் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த ஒபாமா அப்போது ஈரானுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டார்.
அதாவது இதற்கு முந்தைய காலகட்டங்கள் ஈரான் பொருளாதார பிரச்சனைகளை சந்தித்த போது செறிவூட்டப்பட்ட அணுக்களை தங்களின் பாதுகாப்பிற்காக செய்து வந்தது. இதனால் உலகநாடுகளுக்கு அச்சுறுத்தல் என்று கூறப்பட்டது.

அதன் பின்னரே, ஒபாமா இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டார். அதில், தங்கள் தேவை போக மீதமுள்ள செறிவூட்டப்பட்ட அணுக்களை ஈரான் மற்ற நாடுகளிடம் விற்க வேண்டும் எனவும், இதன் மூலம் அவர்கள் அணு ஆயுதங்கள் தயாரிக்காமல் இருப்பது உறுதிசெய்யப்படும் எனவும் கூறப்பட்டது.

மேலும் ஈரான் நாட்டிற்கு விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் நீக்கப்பட்டு, உலகநாடுகளிடமிருந்து முதலீடுகள் கொண்டுவர வழிவகைகள் செய்யப்படும் என்றும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் கையெழுத்திட்டன. இதனால் அதாள பாதாளத்தில் இருந்த ஈரான் பொருளாதாரம் சற்று வளர்ச்சியடைய ஆரம்பித்தது.
அதன் பின் கடந்த 2018-ஆம் ஆண்டு அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பின் 2015-ஆம் ஆண்டு ஈரானுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக 2018-ஆம் ஆண்டு டிரம்ப் அறிவித்தார். மேலும் ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார தடைகளையும் விதித்தார்.
ஏற்கனவே பொருளாதார பிரச்சனையில் இருந்து மீண்டு வந்த ஈரானுக்கு டிரம்ப்பின் இந்த அறிவிப்பால் பொருளாதாரம் மீண்டும் முடங்கத் துவங்கியது.
எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியில் ஒரு அரசனாக இருந்த ஈரான் நாடு டிரம்ப்பின் இந்த அறிவிப்பால் மீண்டும் கீழே சென்றது.
இதன் விளைவாக ஈரானில் நிலவும் வறுமை, மக்கள் தங்கள் உடலுறுப்புகளை விற்று வாழ்க்கை நடத்தும் அளவுக்கு அவர்களை தள்ளியது.

கண்கள் முதல் சிறுநீரகம், கல்லீரல், எலும்பு மஜ்ஜை என உடல் பாகங்கள் அனைத்தும் பொதுவெளியிலேயே விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை தங்களது உடல்பாகங்களை விற்பதற்கான விளம்பரங்களை, அங்குள்ள தெருக்களில் விளம்பர போஸ்டர்களாகவே ஒட்டுகின்ற நிலைக்கு தள்ளப்பட்டனர்.

ஈரானின் இன்றைய மோசமான இந்த பொருளாதார சூழல் என்பது மதவாதம், மோசமான பொருளாதார கொள்கைகள், பிராந்திய அரசியல் ஆகியவற்றால் ஏற்பட்டது என்பதை கடந்து வளர்ந்த நாடு ஒன்றின் வணிக நோக்கத்தாலும், ஆதிக்க எண்ணத்தாலும் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்றே என்பது தான் பலரின் கருத்தாக உள்ளது.
அதேபோல ஏமன், சிரியா உள்ளிட்ட நாடுகளின் உள்நாட்டு போரில் ஈரானின் தலையீடு, அதற்கான உலக நாடுகளின் ஆதரவை பெருவாரியாக குறைத்துள்ளதும் அதன் பொருளாதார சிக்கலுக்கான அடிப்படை காரணமாக பார்க்கப்படுகிறது.

இவை அனைத்தையும் தற்போதுள்ள ஈரான் அரசு கவனத்தில் கொள்ளும்பட்சத்தில் மட்டுமே மீண்டும் சீரான ஒரு வளர்ச்சியை நோக்கி அந்நாடு பயணிக்க முடியும் என அரசியல் நோக்கர்கள் நம்புகின்றனர்.
Leave a Reply