உத்தியோகத்தர் அறைந்தபோது செவிப்பறை வெடித்தது போல் உணர்ந்தேன்! பாதிக்கப்பட்ட தமிழ் பெண்

நிந்தவூர் கமநல சேவை நிலையத்தில் பணி புரியும் பெண்ணை தாக்கிய சம்பவத்தை அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வன்மையாக கண்டித்துள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான குறித்த பெண்ணை இன்று காலை கல்முனை ஆதர வைத்தியசாலைக்கு சென்று நாடாளுமன்ற உறுப்பினர் சந்தித்துள்ளார். இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

மேலதிகாரி ஊழியர்கள் மீது பல்வேறு சந்தர்ப்பங்களில் தாக்குதலுக்கு உள்ளாக்கியதோடு பல அசௌகரியங்களையும் ஏற்படுத்தியுள்ளார். பெண் உத்தியோகத்தரை தாக்கிய மேலதிகாரியை இதுவரை பொலிஸார் கைது செய்யாமல் இருப்பது மிகுந்த மன வேதனையை தருகின்றது.

நான் பொலிஸ் மற்றும் குற்றப்புலனாய்வினரை தொடர்பு கொண்டு விரைந்து கைது செய்யுமாறு தொடர் அழுத்தங்களை கொடுத்து வருகின்றோம். தாக்குதலுக்கு உள்ளான பெண் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதோடு தாக்குதல் மேற்கொண்ட அதிகாரியை பணியிடை நீக்குமாறு வலியுறுத்தியுள்ளேன்.

இந்த தாக்குதல் சம்பவத்தினை தமிழ் மக்கள் இனவாத சம்பவமாகவும் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதியாகவுமே பார்க்கின்றனர். ஆகவே இன முரண்பாடு ஏற்படா வண்ணம் அந்த அதிகாரியை கைது செய்யுமாறு பொலிஸாரை வலியுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சம்பவத்தில் பாதிக்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் 3ஆவது நாளாக சிகிச்சை பெற்றுவரும் தவப்பிரியா கருத்து தெரிவிக்கையில்,

முதலாம் திகதியன்று புத்துணர்ச்சியுடன் கடமைக்கு காலையில் சமூகமளித்திருந்தேன். ஜனாதிபதியின் பணிப்புரைக்கிணங்க காலை 9.02க்கு நடைபெற வேண்டிய அரச ஊழியர்களின் புத்தாண்டு உறுதியுரை காலையில் நடைபெறவில்லை.

நண்பகலைத் தாண்டி ஒரு மணியளவில் உறுதியுரை வைபவத்திற்காக எமது நிலைய தலைவர் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் எங்களை அழைத்தார்.

நாம் முகாமைத்துவ உதவியாளர்களாக கடந்த 5 வருடங்களாக சேவையாற்றி வருகிறோம். அவர் அழைத்ததும் மகிழ்ச்சியுடன் சென்றோம். ஆனால் அங்கு தேசியக்கொடி ஏற்றப்படவில்லை.

தேசிய கீதம் இசைக்கப்படவில்லை. மௌன அஞ்சலி செலுத்தப்படவில்லை. உறுதியுரை கூட வாசிக்கப்படவில்லை. எங்களை நிறுத்தி வைத்து புகைப்படத்திற்காக கையை நீட்டி வாயை அசையுங்கள் என்றார். படம் எடுத்தார்கள்.

பின்பு மறுபக்கத்தால் படம் எடுப்பதற்காக வாயை அசையுங்கள். என்றார் எங்களுக்கு சிரிப்பு வந்துவிட்டது. சிரித்தோம். மறுகணம் அவர் பாய்ந்து வந்து எனது கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

ஏனையோர் முன்னிலையில் பெண்ணான எனக்கு அறைந்தது பாரிய அவமானத்தை ஏற்படுத்தியது மாத்திரமல்லாமல் பாரிய வலியும் ஏற்ப்பட்டது. செவிப்பறை வெடித்து விட்டதாக உணர்ந்தேன்.

எனக்கு அழுகை வந்துவிட்டது. அழுது அழுது இருந்தேன். அதற்கிடையில் யாரோ எனது கணவருக்கு அறிவிக்க அவரும் வந்துபார்த்ததும் அதிர்ச்சியடைந்தார். ஆத்திரப்பட்டார்.

ஆனால் எதுவுமே கேட்காமல் என்னை நேராக சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்திற்கு கூட்டிச் சென்று முறைப்பாடு செய்தார். அப்படியே வந்து கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தார்.

எனக்கு தற்போதும் அப்பகுதி கடுப்பாக இருக்கிறது. இடையிடையே தலைவலி தலைச்சுற்று மயக்கம் வருகிறது.

பால்குடி மறவாத எனது குழந்தைக்கு பால்கொடுக்க முடியாது புத்தாண்டில் வைத்தியசாலையில் வந்து படுத்துக் கிடக்கிறேன், வேதனையாகவுள்ளது.

மேலும் சம்மாந்துறைப் பொலிஸ் ஒருவர் எமது அலுவலகத்திற்கு வந்து எம்முடன் பணியாற்றுகின்ற ஒரு உத்தியோகத்தரிடம் வாக்குமூலம் எடுத்துச் சென்றதாக அறிந்தேன்.

ஆனால் என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய அந்த உத்தியோகத்தரை பொலிஸார் இன்னும் கைது செய்யாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சுகமானாலும் நான் அங்கு செல்ல மாட்டேன்.

அவர் அதிகாரி அல்ல ஒரு சர்வாதிகாரி போல அராஜகம் நடாத்துகிறார். அச்சமாக உள்ளது. அவமானப்பட்டுள்ளேன். எனக்கு நீதி வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

கல்முனை பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் இஸ்ஸத்தீன் லத்தீப்பிடம் கேட்டபோது,

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை 3ஆவது பெண் விடுதியில் தாக்குதல் சம்பவம் காரணமான ஒரு பெண்மணி அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதை எமக்கு கிடைத்த முறைப்பாட்டின் ஊடாக அறியக் கிடைத்தது.

குறித்த தாக்குதலினால் பெண் ஊழியரது செவிப்பறை வெடித்துள்ளதா இல்லையா என்பதை வைத்தியப் பரிசோதனை தான் உறுதி செய்ய வேண்டும். அதன் பின் சட்டவைத்திய அதிகாரியின் மருத்து அறிக்கையும் எமக்கு வழங்கப்படும்.

பின்னர் தாக்கப்பட்டவரின் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் விசாரணைகளை மேற்கொண்ட பின்பே எதுவும் கூற முடியும் என குறிப்பிட்டுள்ளார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *