
லிபியா தலைநகர் திரிபோலி அருகே உள்ள இராணுவ பள்ளிமீது நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 28 பேரே உயிரிழந்துள்ளனர். மேலும் 12க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என அந்நாட்டு உட்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
லிபியாவில் ஆட்சியில் இருந்த சர்வாதிகாரி கடாபி, 2011ஆம் ஆண்டு கொல்லப்பட்டதில் இருந்து உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. பல்வேறு ஆயுதக் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. கலிபா கப்தார் தலைமையிலான ஆயுதக் குழுவினர் நாட்டின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த குழுவினர், சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுப் படைகளுடன் சண்டையிட்டு வருகின்றனர்.
அரசுப்படை வசம் உள்ள தலைநகர் திரிபோலியை கைப்பற்றுவதற்காக கலிபா கப்தார் தலைமையிலான ஆயுதக் குழுவினர் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்த சண்டையில் சுமார் 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 2 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஊரைவிட்டு வெளியேறியுள்ளனர்.
இவ்வாறான நிலையிலேயே இராணுவ பள்ளி மீது இவ்வாறு வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply