
ஈராக்கிலுள்ள அமெரிக்க படைகளை வெளியேற கட்டாயப்படுத்தினால், ஈராக்கிற்கு கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் உள்ள வெளிநாட்டுப் படைகளை வெளியேற்றுவதற்காக, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், வெளிநாட்டுப் படைகளை வெளியேற்றுவதற்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
இந்த நிலையில் இத்தீர்மானத்தை எதிர்த்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈராக்கிலுள்ள அமெரிக்க படைகளை வெளியேற்றினால், ஈராக் இதுவரை கண்டிராத பொருளாதார தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து ட்ரம்ப் கூறுகையில், ‘பல பில்லியன் டொலர்கள் மதிப்பிலான விலை உயர்ந்த விமான தளங்களை கட்ட அமெரிக்கா அளித்த பணத்தை இராக் திரும்ப அளிக்கும்வரை அமெரிக்க படைகள் அந்நாட்டிலிருந்து வெளியேறாது.
எங்கள் படைகளை வெளியேற கட்டாயப்படுத்தினால் நாங்கள் அவர்கள் இதற்கு முன்னர் பார்த்திருந்த வகையில் பொருளாதார தடைகளை விதிப்போம்’ என கூறினார்.
ஈராக்கில் இயங்கிவரும் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்புக்கு எதிராகப் போரிட உதவுவதற்காக, அந்நாட்டுக்கு அமெரிக்கா தனது படைகளை 4 ஆண்டுகளுக்கு முன் அனுப்பி வைத்தது. தற்போது இராக்கின் பல்வேறு பகுதிகளில் அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த 5,000 வீரர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply