
லிபியாவில் மேற்கொள்ளப்பட்ட வான்வழித்தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளதாக, சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இராணுவ பயிற்சி நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதலில் உயிரிழந்தோரில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தலைநகர் திரிபோலியில் உள்ள ஹடபா பகுதியில் நேற்று முன் தினம் (சனிக்கிழமை) நள்ளிரவு மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
லிபிய தலைநகர் திரிபோலியில் ஐ.நா. ஆதரவு பெற்ற அரசு நிர்வாகத்துக்கும், அதற்கு எதிராக போராடி வரும் லிபிய தேசிய இராணுவ படைக்கும் (எல்என்ஏ) இடையே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது. எனவே, இந்த தாக்குதலை எல்என்ஏ நடத்தியதாக திரிபோலி அரசு நிர்வாகம் குற்றம்சாட்டியுள்ளது.
லிபியாவை 40 ஆண்டுகளுக்கு மேல் ஆண்டு வந்த அல்-கடாஃபியின் ஆட்சியை, அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளின் உதவியுடன் கிளர்ச்சியாளர்கள் கடந்த 2011ஆம் ஆண்டு கவிழ்த்தனர்.
எனினும், அதற்குப் பிறகு அந்த நாட்டில் பல்வேறு ஆயுதக் குழுக்களும் தங்களுக்குள் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றன.
Leave a Reply