
எம்.சி.சி. உள்ளிட்ட இலங்கைக்கு எதிரான உடன்படிக்கைகள் எனக் கூறப்படும் உடன்படிக்கைகளை பெப்வரி 4 ஆம் திகதி கிழித்தெறிய தயாராகவே உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மேலும், இதுதொடர்பாக அரசாங்கத்தின் பதில் என்ன என்றும் அவர் வினவினார்.
நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு கூறினார். சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “அரசியல் மேடைகளில் கொள்கைப் பிரகடனங்களை அறிவிப்பது ஒரு வழக்கமான விடயமாகும்.
அந்தவகையில், அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என நாம் கேட்டுக் கொள்கிறோம்.
இந்த கொள்கைப் பிரகடனத்தை நம்பித்தான் 63 இலட்சம் மக்கள் இந்த அரசாங்கத்தை ஸ்தாபித்தார்கள். இதற்காக நாம் முழுமையான ஒத்துழைப்புக்களை அரசாங்கத்துக்கு வழங்கத் தயாராகவே இருக்கிறோம்.
கடந்த நவம்பர் 15 ஆம் திகதி நாட்டில் காணப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும், ஜனவரி 6 ஆம் திகதி வரையிலான அத்தியாவசியப் பொருட்களின் விலைக்கும் இடையிலான வித்தியாசங்களைக் கண்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஒன்றரை மாதங்களிலேயே மக்கள் மீது சுமை ஏற்றப்பட்டுள்ளது. அரசாங்கம் மேற்கொள்ளும் மக்கள் சேவைக்கு நாம் முழுமையாக ஒத்துழைப்புக்களை வழங்கத் தயாராகவே இருக்கிறோம்.
இராணுவத்தை பாதுகாத்தல், தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களுக்கு நாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அல்ல, அதற்கு மேலாகவும் வழங்கத் தயாராகவே இருக்கிறோம்.
நாட்டை முன்னேற்ற வேண்டுமெனில், முதலில் இங்கு புரையோடிப்போயுள்ள இனவாதத்தை முற்றாக துடைத்தெறிய வேண்டும்.
இதன்ஊடாகத்தான் தேசிய பாதுகாப்பையும் பலப்படுத்த முடியும். இதற்கான விசேட வேலைத்திட்டங்களை நாம் கொண்டுவரவேண்டும்.
ஜனநாயகத்தையும், சுமந்திரத்தையும் அதிகப்படுத்தும்போதுதான் இந்த செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும்.
அத்தோடு, ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின்போது எம்.சி.சி. உடன்படிக்கை, எக்சா, சோபா உடன்படிக்கை, சிங்கப்பூர்- இலங்கை உடன்படிக்கை உள்ளிட்ட உடன்படிக்கைகள் தொடர்பாக இப்போதைய அரசாங்கத் தரப்பினர் குற்றஞ்சாட்டினார்கள்.
இவற்றால், இலங்கை இரண்டாக பிளவடையும் என்று கூறினார்கள். நான் இங்கு ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
இந்த உடன்படிக்கைகளை கிழித்தெறிய நாம் தயாராகவே இருக்கிறோம். நாம் இரண்டு தரப்பினரும் ஒன்றிணைந்து பெப்வரி 4 ஆம் திகதி எம்.சி.சி. உடன்படிக்கையை கிழித்தெறிவோம். இதற்கு நாம் தயார்.
அதேநேரம், தற்போது சிலர் எம்.சி.சி.உடன்படிக்கையை செய்துக் கொள்வது தொடர்பாகவும் கதைக்கிறார்கள். இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. எம்.சி.சி. மட்டுமன்றி, ஏனைய உடன்படிக்கைகளையும் இல்லாது செய்ய நாம் தயாராகவே இருக்கிறோம்.
இதுதொடர்பாக அரசாங்கத்தில் பதில் என்ன என்று நாம் கோர விரும்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply