
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
அதற்கமைய குறித்த வழக்கு உச்ச நீதிமன்றின், 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் 2018ஆம் ஆண்டு தீர்ப்பை எதிர்த்து இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு 13ஆம் திகதி முதல் விசாரிக்கப்படும்’ என கூறப்பட்டுள்ளது.
மேலும் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது மட்டுமின்றி முஸ்லிம் மற்றும் பார்சி பெண்களுக்கு வழிபாட்டு தலங்களில் இழைக்கப்படும் சர்ச்சைக்குரிய பாகுபாடுகள் குறித்தும் விசாரிக்கப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து கடந்த 2018ஆம் ஆண்டு அதிரடியாக உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த 5 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, இந்த விவகாரத்தை 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றுவதாக கடந்த நவம்பர் 14ஆம் திகதி தீர்ப்பளித்தது.
இதைத்தொடர்ந்து இந்த மேன்முறையீட்டு மனுக்களை விசாரிக்க 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது.
இந்த அமர்விலேயே குறித்த வழக்குகள் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
Leave a Reply