
ஜனாதிபதியின் செயற்பாடுகளைக் கண்டு, இன்று அவருக்கு வாக்களிக்காதவர்கள்கூட ஆதரவினை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் என அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். டக்லஸ் தேவானந்தா மேலும் கூறியுள்ளதாவது, “இன்று ஒட்டுமொத்த நாடும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஏற்றுக்கொண்டுள்ளனர்
அவருக்கு வாக்களித்தவர்களுடன், வாக்களிக்காதவர்களும் இவ்வாறான ஒரு தலைவர் நாட்டுக்கு கிடைத்தமையை இட்டு மகிழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
அரசாங்கத் தலைவர் ஒருவர் மிகவும் சாதாரணமாக இருக்கிறார். அவர் நாடாளுமன்றுக்கும் இரண்டு வாகனங்களில்தான் வந்தார்.
ஆனால், முன்னாள் தலைவர் அனைவரும் நாடாளுமன்றுக்கு வரும்போது குதிரைப்படை புடை சூழ, வாகன அணிவகுப்பில்தான் வந்தார்கள். நவம்பர் 16 ஆம் திகதிக்கு முன்னர் இந்த நிலைமை இருக்கவில்லை. இந்த 7 வாரங்களில் எல்லாம் மாறிவிட்டது.
இந்தக் காலத்தில் பாதாளக் குழுக்கள் எங்கு போனது என்றுக்கூடத் தெரியவில்லை. இந்தப் பயணத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டுமெனில், எமக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மைப் பலம் கிடைக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply