
நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் அறுவர் காயமடைந்துள்ளனர்.
அதற்கமைய மொறவக்க வரல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மொறவக்க பிரதேசத்தில் இருந்து பயணித்த பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் தனியார் பேருந்து ஒன்றும் தெனியாய வைத்தியசாலையை பார்வையிட வைத்தியர்களை ஏற்றிச் சென்ற சுகாதார அமைச்சிக்கு சொந்தமான வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் வானில் பயணித்த வைத்தியர்கள் மூவரும் வான் சாரதியும் காயமடைந்துள்ளனர். அத்தோடு, பேருந்து சாரதியும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்நிலையில், காயமடைந்த ஐவரும் மொறவக்க கொஸ்நில்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வான் சாரதியினதும் இந்திய வைத்தியரினதும் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் விபத்துக்குள்ளான இரண்டு வாகனங்களும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.
வவுனியா – ஏ9 வீதியில் தேசிய இளைஞர்சேவை மன்றத்தின் முன்பகுதியில் கிளிநொச்சியில் இருந்து சிலாபம் நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம், வவுனியா நகர்ப்பகுதியிலிருந்து தோணிக்கல் நோக்கி பயணித்த மோட்டார் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் வண்டியில் பயணித்த பெண்னொருவர் பலத்த காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Leave a Reply