
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வழிதவறி சென்றதால்தான் அவர் மீதான அ.தி.மு.க.வின் அனுதாபம் குறைந்ததாக அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் செம்மலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இடையே சட்டமன்றத்தில் காரசார விவாதம் நடைபெற்றது.
சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது பேசிய அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் செம்மலை, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் சிகிச்சைக்காக விமானத்தில் சென்னை வந்தபோது, அவரை அப்போதைய தி.மு.க. தலைமையிலான அரசு தடுத்து நிறுத்தியது என்றும் ஆனால் தற்போது இலங்கை தமிழர்கள் குடியுரிமைக்காக தி.மு.க. போராடுகிறது எனவும் விமர்சித்தார்.
இலங்கை தமிழர் விவகாரத்தில் தி.மு.க. இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகன், பிரபாகரன் ஒரு தீவிரவாதி என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா விமர்சித்தது ஏன் என கேள்வி எழுப்பினார்.
துரைமுருகனுக்கு பதில் அளித்த செம்மலை, பிரபாகரன் நல்ல வழியில் சென்றபோது, அவரை எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் ஆதரித்தார்கள் என்றும், ஆனால் அவர் வழி தவறியபோது அ.தி.மு.க.வுக்கு அவர் மீதான அனுதாபம் குறைந்தது எனவும் கூறினார்.
அதனை தொடர்ந்துப் பேசிய தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகன், குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இலங்கை தமிழர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, மத்தியில் 12 ஆண்டுகள் அங்கம் வகித்த தி.மு.க. இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத் தராமல் எங்கே போனது என கேள்வி எழுப்பினார்.
இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை கிடைக்கும் வரை, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம் எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழக மக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் சிறப்பு தொகுப்பு உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் இலங்கை தமிழர்களுக்கும் வழங்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதன்போது குறிப்பிட்டார்.
Leave a Reply