கேரள-தமிழக எல்லையில் நடந்த சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை..! மர்ம நபர்களின் புகைப்படம்-சிசிடிவி காட்சி வெளியீடு

கேரள-தமிழ்நாடு எல்லையில் காளியக்காவிளையில் உள்ள சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்ற இரண்டு பேரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த 58 வயதான வில்சன், தமிழக எல்லைக்குட்பட்ட காளியக்காவிளையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார்.

புதன்கிழமை இரவு 9:30 மணியளவில் மணல் கடத்தலைத் தடுக்க அமைக்கப்பட்ட சோதனைச் சாவடியில் வில்சன் மட்டுமே பணியில் இருந்துள்ளார்.

நடந்து வந்த மர்ம நபர்கள் வில்சனை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். வில்சன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் இறந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

58 வயதான வில்சன் நான்கு மாதங்களில் ஓய்வு பெறவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கன்னியாகுமரி கலெக்டர் மற்றும் எஸ்.பி. உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் சம்பவயிடத்திற்கு விரைந்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மாநிலத்திற்குள் நுழைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கேரள காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

தாக்குதல் நடத்தியவர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் காரின் விவரங்களை தமிழ்நாடு பொலிசார் கேரள பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதன் அடிப்படையில் கடுமையான சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வில்சனை சுட்டுக்கொன்ற நபர்களின் புகைப்படங்களை கேரள பொலிஸ் வெளியிட்டுள்ளது. 2 பேரில் ஒருவனின் பெயர், அப்துல் ஷமீம் என்றும், இன்னொருவனின் பெயர் தவுபீக் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

அவர்கள் 2 பேரும், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கூறியுள்ள காவல்துறை, தீவிரவாத அமைப்புடன் அவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, 2 பேருக்கு எதிரான தேடுதல் வேட்டையை தமிழகம் மற்றும் கேரள காவல்துறையினர் முடுக்கி விட்டுள்ளனர்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *