
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் இணையத்தள சேவை முடக்கம் மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பாக ஒரு வாரத்தில் பரிசீலனை செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து அம்மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 40 இற்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
குறித்த மனுக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட நிலையில், மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, தனி நபர் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை காக்கவேண்டியது அரசு மற்றும் நீதிமன்றத்தின் கடமையாகும். ஜம்மு காஷ்மீரில் தனி நபர் சுதந்திரம் மற்றும் மற்றும் பாதுகாப்பை சமமாக பார்க்கவேண்டியுள்ளது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இணையத்தளத்தில் கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் என்பது ஒரு மனிதனின் அடிப்படை உரிமையாகும் எனவும், இது அரசியல் சாசன சட்டப்பிரிவு 19இன் கீழ் வருவதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆகவே இணையத்தளம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கும்போது, அதனை மக்களுக்கு மத்திய அரசு முறையாக தெரிவிக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், ஜம்மு காஷ்மீரில் அமுலில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்குவது பற்றி ஒரு வாரத்தில் அரசு பரிசீலிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.
Leave a Reply