
நீதிமன்றத்தின் மேல் நம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளதன் மூலம் நாட்டில் அராஜகம் தலை தூக்கியுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று(புதன்கிழமை) பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘நாடாளுமன்றத்தை அரசியல் சேறு பூசும் செயற்பாடுகளில் இருந்து விடுவித்து அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் இடமாக மீண்டும் மாற்றுவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது.
மேலும் தற்போது வெளிவரும் சர்ச்சைக்குரிய குரல் பதிவுகளின் மூலம் கடந்த அரசாங்கம் நீதிமன்ற செயற்பாடுகளில் எந்தளவிற்கு தலையீடு செய்துள்ளது என்பது புலப்படுகின்றது.
இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை எவ்வாறு நம்புவது என மக்கள் கேட்கின்றனர். இதன் ஊடாக நீதிமன்றத்திற்கு பாரிய அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே, நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது.
நீதிமன்றத்தின் மேல் நம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளதன் மூலம் நாட்டில் அராஜகம் தலை தூக்கியுள்ளது.
அன்று எமது பக்கத்தில் இருந்தவர்களுக்கு எதிராக வாகன பாவனை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காகவே வழக்கு தொடரப்பட்டது. மேலும் காலாசார நீதியும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply