
பிரான்ஸில் அரசின் ஓய்வூதியத் திட்ட சீர்திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தில், நான்கு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபட்டதாக உட்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
தற்போது இந்த போராட்டத்தின் வலு சற்று குறைந்திருப்பதாக கூறப்பட்டாலும், ஒரு சில பகுதிகளில் தொழிலாளர்கள் தொடர்ந்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற போராட்டம் குறித்து உட்துறை அமைச்சகம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.
இதில், ‘நாடு முழுவதும் 452,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலை 4 மணி நிலவரப்படி, 56,000 பேர் தலைநகர் பரிசில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த டிசம்பர் 17 ஆம் திகதி இடம்பெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் 615,000 பேர் கலந்துகொண்டனர். அதன் போது பரிசில் 56,000 பேர் கலந்துகொண்டிருந்தனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் பல்வேறு புதிய விதிமுறைகளை ஓய்வூதிய திட்டத்துக்குள் கொண்டுவந்ததால், தற்போது ஊழியர்களிடையே பெரும் நம்பிக்கையின்மை எழுந்துள்ளது. ஓய்வூதிய வயது வரம்பு 62 இல் இருந்து 64 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தவிர, சேவைக்காலத்தை பொறுத்து ஓய்வூதியத்தின் தொகை மாறுபடும். ஓய்வூதியத்தை 64 வயதுக்கு முன்னதாக கோரினால் ஓவ்வூதியத் தொகை வேறுபடும் என பல புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனால் அரசின் ஓய்வூதியத் திட்ட சீர்திருத்தத்தை எதிர்த்து, கடந்த 5ஆம் திகதி முதல் பிரான்ஸின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதில் ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், பொலிஸார், விமானநிலைய ஊழியர்கள் என பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.
இதனால், ரயில்வே, மெட்ரோ ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் என பல பொது இடங்கள் முடங்கிப் போயுள்ளன. இந்த நிலைமை தற்போது வரை முழுமையாக வழமைக்குத் திரும்பவில்லை.
Leave a Reply