மலையக தியாகிகள் தினம் அனுஷ்டிப்பு!

மலையக தியாகிகள் தினம் பெருந்தோட்டப்பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் பிரதான நினைவேந்தல் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) மஸ்கெலியா  நகரில் இடம்பெற்றது.

மலையக உரிமை குரல் மற்றும் பிடித்தளராதே ஆகிய அமைப்புகள் ஏற்பாடு செய்த இவ் நினைவேந்தல் நிகழ்வில் தொழிலாளர்களின் உரிமை போராட்டத்தில் உயிர் நீத்த மலையக தியாகி சிவனு லெட்சுமனனின் தங்கை  பொதுச் சுடரை ஏற்றி ஆரம்பித்து வைத்தார். இதனை தொடர்ந்து பெருந்திரளான மக்கள் உணர்வுப்பூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

அத்துடன், இந்நிகழ்வின்போது  அரசியல் ஆய்வாளரும்,  சிரேஷ்ட ஊடகவியலாளருமான என். சரவணனால் எழுதப்பட்ட மலையக ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பான ‘கள்ளத்தோணி’ என்ற நூலும் வெளியிடப்பட்டது.

மேலும் காளிதாசன் குழுவினரின் வீதி நாடகம்,  மலையக தியாகிகள் தொடர்பான விசேட உரை ஆகியனவும் இடம்பெற்றதுடன், மலையகத் தமிழர்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களுக்கு உயர்கொடுத்துவரும்  கலைஞர்கள்  கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில், மலையக உரிமை குரல் தலைவர் ராமச்சந்திரன் சனத்,  மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ்,  ஊடகவியலாளர்கள்,  தியாகிகளின் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *