
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தமிழக மக்களுக்காக செயற்படுவார் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ரஜினிகாந்த் இப்போது தமிழராகவே மாறிவிட்டார். எனவே தமிழ்நாட்டு மக்களுக்காக அவர் பணிபுரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். எப்போதும் வலியுறுத்தி வருகிறேன். அவர் நிச்சயம் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்வார். அதற்கான சரியான முடிவையும் எடுப்பார்.
நான் ஹேராம் படம் எடுத்தபோதே அரசியலுக்குள் நுழைந்துவிட்டதாக நினைக்கிறேன். ஆனால் அந்த படத்தை இப்போது உள்ள சூழ்நிலையில் எடுக்க முடியாது. கடும் எதிர்ப்புகள் வரும். இன்று நாடே பிரிவினை அரசியலுக்குள் சிக்கிவிட்டது.
திராவிட அரசியல் சரியான திசையை நோக்கி பயணிக்க வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு இப்போது ஊழல் மிகுந்த மாநிலமாக மாறிவிட்டது. தலைமையில் மாற்றம் வராமல் இது மாற வாய்ப்பு இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
Leave a Reply