
ஈரான் புரட்சிப் படைத் தளபதி காசிம் சோலெய்மனியை இலக்குவைத்த அதேநாளில் யேமனில் மற்றொரு ஈரான் தளபதியையும் கொல்ல அமெரிக்கா திட்டமிட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யேமனில் உள்ள ஈரானின் முக்கிய படைத் தளபதியான அப்துல் ரேஷா ஷஹ்லை (Abdul Reza Shahlai) என்பவரை அமெரிக்கப் படைகள் குறிவைத்ததாகவும், ஆனால் இந்தத் திட்டம் தோல்வியடைந்ததாகவும் அமெரிக்க இராணுவ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இதுகுறித்த முழுமையான தகவலை அமெரிக்க இராணுவம் வெளியிடவில்லை.
ஈரான் படையின் தளபதி காசிம் சோலெய்மனி, கடந்த 3ஆம் திகதி ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க இராணுவம் ஆளில்லா விமானம் மூலம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் காசிம் சோலெய்மனியுடன் அவரின் மருமகன் முகந்தியாஸ் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து இதற்குப் பதிலடியாக ஈராக்கில் பாக்தாத் அருகே உள்ள அல் அசாத் மற்றும் இர்பில் ஆகிய விமான தளங்களைக் குறிவைத்து ஈரான் இராணுவம் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியது.
இதில் 80 அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்தது. இதன்காரணமாக ஈரான் – அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில் அமெரிக்காவின் மற்றைய இலக்கு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply