ஐ.தே.க. வின் சில உறுப்பினர்கள் கோட்டாவுடன் இணைய இரகசியத் திட்டம் – மனோ

ஐக்கிய தேசியக் கட்சியின் சில உறுப்பினர்கள் இரகசியமாக ஆளுங்கட்சியுடன் உறவாடி அரசுக்கு 2/3 பெரும்பான்மையை பெற்றுத்தர திட்டமிட்டு செயற்படுவதாக ஐ.தே.க.வின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அக்கட்சியின் தலைவர் மனோ கணேசன் முகப்புத்தகத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

குறித்த பதிவில், “ஐக்கிய தேசியக் கட்சிக்குள் புதிய இரத்தம் பாய்ச்ச கட்சி தலைமை தயாரில்லைபோல் தெரிகிறது.

இக்கட்சியுடன் கூட்டணியில் இருப்பதாலும் ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ என்ற முதிர்ச்சியற்ற அரசியலை எப்போதும் செய்யாததாலும் இது பற்றி நாமும் அக்கறை கொள்ளவேண்டியுள்ளது. இல்லா விட்டால் ‘சரிதான் போங்கடா’ என நாம் சும்மா இருக்கலாம்.

இப்போ பார்த்தால் இவர்களில் சிலர் இரகசியமாக ஆளும் கட்சியுடன் உறவாடி அரசுக்கு 2/3 பெரும்பான்மை பெற்றுத்தர திட்டமிட்டு செயற்படுவதாகவும் தெரிகிறது.

‘பங்காளி சிறுபான்மை கட்சிகள் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும். நாம் ஐ.தே.க.வாக தனித்து போட்டியிடுகிறோம்’ என நவின் திசாநாயக்க கூறகிறார்.’அப்படி கூற வேண்டாம்’ என நவீனை திருத்த ரணில் விக்ரமசிங்க தயாராகவுமில்லை.

எல்லோரும் தனித்து போட்டியிட்டால், இது ஆளும் கட்சிக்கு 2/3 சுலபமாக பெற்று தரும். ஆகவே இது ஆளும் கட்சியின் இரகசியத் திட்டம்.

இப்படி ஐ.தே.க. உறுப்பினர்கள் இரகசியமாக உறவாடுவது, செயற்படுவது, சில சிறுபான்மை பங்காளி கட்சிகள் மத்தியில் ஆளும் கட்சியுடன் பகிரங்கமாகவே பேசுவோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதை என்னால் உணர முடிகிறது.

16ம் திகதி நடைபெறவுள்ள இறுதி சமரச கூட்டத்தில் தீர்வு எட்டப்படாவிட்டால், விளைவுகள் பாரதூரமாகலாம்” என மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *