
ஓமனின் புதிய மன்னராக அந்நாட்டின் கலாசாரத் துறை அமைச்சர் ஹைதம் பின் தாரிஹ் (Haitham bin Tariq) பதவியேற்றுள்ளார்.
ஓமன் மன்னர் காபூஸ் பின் சைத் உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்ததைத் தொடர்ந்து ஹைதம் பின் தாரிஹ் மன்னராக சனிக்கிழமை பதவியேற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அரச குடும்பத்தில் நடந்த சபையின் கூட்டத்தில் ஹைதம் பின் தாரிக் அல் சைத் பதவி ஏற்றுக்கொண்டார்.
ஓமன் மன்னர் காபூஸ் பின் சைத் (வயது-79) சில மாதங்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த டிசம்பர் மாதம் சிகிச்சைக்காக பெல்ஜியம் சென்று வந்த நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக அவர் மரணமடைந்ததாக ஓமன் அரசு இன்று காலை அறிவித்தது.
மறைந்த ஓமன் மன்னர் காபூஸ் பின் சைத் கடந்த 1970ஆம் ஆண்டு தனது தந்தையை ஆட்சியிலிருந்து வெளியேற்றி அரியணையில் ஏறியவர். இவரது ஆட்சிக் காலத்தில் ஓமனில் பல நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தினார். 79 வயதான காபூஸ் பி சைத் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஓமனை ஆட்சி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அரேபியாவின் நீண்டகால ஆட்சியாளரான ஓமனின் சுல்தான் காபூஸ் பின் சய்த் காலமானதைத் தொடர்ந்து அந்நாட்டில் மூன்று நாட்கள் துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் நாட்டின் தேசியக்கொடி 40 நாட்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காலமான சுல்தான் காபூஸைத் தொடர்ந்து அரியணை ஏறப்போவது யார் என்பதை 72 மணி நேரத்தில் அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் கலாசாரத் துறை அமைச்சர் ஹைதம் பின் தாரிஹ்-கை ஓமனின் அரச குடும்பத்தினர் மன்னராக தேர்வுசெய்துள்ளனர்.
Leave a Reply