
ஐக்கிய தேசிய கட்சி, தான் இதுவரை செய்த குற்றங்களை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற சுயாதீனம் மீது கேள்வி எழுந்துள்ளமை தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வினவியப்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தினேஷ் குணவர்த்தன மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய தேசிய கட்சி கடந்த 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த முதல் ஆட்சியை விட்டுசெல்லும் வரையில் தமது அதிகாரத்தை பயன்படுத்தி ஏனைய அனைவரையும் அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தியுள்ளனர்.
அவர்கள் நாட்டையோ மக்களையோ பற்றி சிந்திக்காமல் அரசியல் பழிவாங்கல்களை மாத்திரமே மேற்கொண்டிருந்தனர்.
அதாவது பயனற்ற அரசியல் வேலைத்திட்டங்கள், அரச அதிகாரிகள் மீதான பழிவாங்கல், அரசியல் பாகுபாடு என அனைத்தையும் செய்துள்ளனர். இதன் விளைவாகவே இன்று மிகவும் பாரதூரமான விடயங்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் இதுவரை நடந்திராத வகையில் நீதிமன்றதின் மீதான தலையீடுகள், சுயாதீன ஆணைகுழுக்கள் மீதான தலையீடுகள் செய்யப்பட்டு அதிகாரிகள் அச்சுறுத்தல்படுவதும் விலை பேசப்படுவதும் இடம்பெற்றுள்ளன. குரல் பதிவுகள் இன்று வெளிவருகின்றன.
இது நீதிமன்ற சுயாதீனத்திற்கான அச்சுறுத்தல் என்பது உண்மையாகும். நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவு என்ற ஒன்றை உருவாக்கி அதனை வைத்து எதிர்க்கட்சிகளின் வாய்களை மூட முடியும் என நினைத்தார்கள்.
ஆனால் இன்று அவர்களுக்கே அது ஆபத்தாக முடிந்துள்ளது. எம்மை குற்றவாளிகள் என கூறிக்கொண்டு இறுதியாக இவர்கள் நீதிமன்றத்தை அச்சுறுத்திய உண்மைகள் வெளிவந்துள்ளன.
எனவே ஐக்கிய தேசிய கட்சி வெளிப்படையாக அவர்களின் குற்றங்களை ஒப்புக்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply