
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு- கிழக்கிற்கு வெளியில் போட்டியிடுவது தொடர்பாக இன்னும் இறுதி முடிவை கூட்டமைப்பு எடுக்கவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
வடக்கு- கிழக்கிற்கு வெளியில் கூட்டமைப்பு போட்டியிடப்போவதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக தர்மலிங்கம் சித்தார்த்தன் மேலும் கூறியுள்ளதாவது, “வடக்கு- கிழக்கிற்கு வெளியில் போட்டியிடுவது தொடர்பாக கட்சிக் கூட்டங்களில் ஆலோசிக்கப்பட்டது.
ஆனால் அது தொடர்பாக ஒரு தீர்க்கமான முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை.
அத்துடன் வடக்கு- கிழக்கிற்கு வெளியில் போட்டியிடுவது பல பிரச்சினைகளை அல்லது தாக்கங்களை ஏற்படுத்துமா என்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறு போட்டியிடும்போது நாங்கள் ஒரு ஆசனத்தையேனும் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஒன்று இருக்குமாக இருந்தால் ஏனைய தமிழ் சிறுபான்மைக் கட்சிகளை குழப்புகின்ற அல்லது அவர்களைப் பாதிக்கின்றதொரு நிலைமை ஏற்பட்டு விடும்.
அத்துடன் அந்தச் சிறுபான்மைக் கட்சிகளுடன் எங்களுக்கு இருக்கக் கூடிய நல்லுறவுகள் அற்றுப்போகிற நிலைமைகள் வந்துவிடும்.
எனவே இவைகளை அனைத்தையும் கவனத்திற்கொண்டே நாம் இவ்விடயத்தில் உரிய முடிவினை எடுப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply