
நாட்டுக்கு எதிராக தேச விரோத கோஷங்களை யார் எழுப்பினாலும் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்க்கட்சியினர் தங்களால் முடிந்த வரை எதிர்ப்பு தெரிவிக்கட்டும். ஆனால் பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக குடியேறிய சிறுபான்மை சமூகத்தினர் அனைவருக்கும் இந்திய குடியுரிமை அளித்த பிறகே ஒய்வு எடுப்போம். இதை யாராலும் தடுக்க முடியாது.
இந்தியாவில் நமக்கு எந்த அளவுக்கு உரிமை இருக்கிறதோ, அதே அளவுக்கு பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்களுக்கு உரிமை இருக்கிறது. அவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். இந்த தேசம் அவர்களை அரவணைக்கும்.
குடியுரிமை திருத்த சட்டத்தால் முஸ்லிம்களின் குடியுரிமை பறிக்கப்படும் என்று ராகுல் காந்தி, மம்தாபானர்ஜி, கெஜ்ரிவால், இடதுசாரி கட்சியினர் உள்ளிட்டோர் பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
அந்த சட்டத்தில் முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்கும் வகையிலான பிரிவு ஏதேனும் இருப்பதாக காட்ட முடியுமா? என்று அவர்களுக்கு மீண்டும் சவால் விடுக்கிறேன். குடியுரிமை திருத்த சட்டத்தில் மக்களின் குடியுரிமையை பறிக்கும் எதுவும் இல்லை. உண்மையில் குடியுரிமை வழங்குவதற்காகவே அந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
Leave a Reply