
மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தை செய்ய வேண்டுமாயின் அடுத்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற வேண்டும் என முதலீட்டு ஊக்குவிப்பு, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெறவில்லை என்றால், கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக தெரிவு செய்து மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தை செய்ய முடியாமல் போகும் என்றும் கூறியுள்ளார்.
கட்டானை மற்றும் மீரிகமை தொகுதிகளின் உள்ளூராட்சி பிரதிநிதிகளுடன் கொழும்பில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
சிரமத்திற்கு மத்தியிலேயே அரசாங்கத்தை முன்னெடுத்து செல்கிறோம். இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்காமலேயே அரசாங்கத்தை முன்னெடுத்து வருகின்றோம்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவான பின் எமது அரசாங்கம் ஆட்சி அமைத்தாலும் எமக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையில்லை. இதனால், மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தை செய்வது சிரமம்.
19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின்படி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால் கோட்டாபய ராஜபக்ச போட்டியிட்டார்.
அவர் ஜனாதிபதியாக தெரிவான பின்னர் நாட்டு மக்கள் சுவிசேஷமான மாற்றத்தை எதிர்பார்த்தனர்.
அடுத்த பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றால் மட்டுமே அந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply