
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினால் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் தொலைபேசி உரையாடல்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அதற்கமைய குறித்த விசாரணைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச இரசாயணப் பகுப்பாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரஞ்சன் ராமநாயக்கவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இருவட்டுக்கள் அடங்கிய பொருட்களை அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்திடம் முன்வைத்து அது தொடர்பான அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு நுகேகொட நீதவான் நீதிமன்றம் கடந்த 9 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.
அதற்கமைவாக கைப்பற்றப்பட்ட இருவட்டுக்கள் அடங்கிய பொருட்களை அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்திடம், குற்றப்புலனாய்வு பிரிவு ஒப்படைத்துள்ளது.
அதேபோல ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட அனுமதி பத்திரம் காலவதியான துப்பாக்கியும் அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மாதிவெலயில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து கடந்த நான்காம் திகதி கைது செய்யப்பட்டார்.
இதன்போது பல இருவட்டுக்கள் அவரின் இல்லத்தில் இருந்து மீட்கப்பட்டன. இதனையடுத்து முன்னைய ஆட்சியின்போது குற்றப்புலனாய்வு திணைக்கள முன்னாள் பணிப்பாளர் சானி அபேசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா உள்ளிட்ட பலருடன் கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பான குரல் பதிவுகள் அனைத்தும் பகிரங்கமாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply