
பிரித்தானிய இளவரசர் ஹரியும் மேகனும் கனடாவுக்கு குடிபெயரும் பட்சத்தில், அவர்களுக்கான பாதுகாப்புச் செலவை ஏற்றுக்கொள்வதாக வாக்களித்ததிலிருந்து கனடா நேற்றிரவு பின்வாங்கியுள்ளதாக தோன்றுகிறது.
பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் தம்பதியரும், அவர்களுடைய மகன் ஆர்ச்சியும் கனடாவுக்கு குடிபெயரும் நிலையில், அவர்களது பாதுகாப்புச் செலவில் ஒரு பகுதியை ஏற்றுக்கொள்வதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிரித்தானிய மகாராணியாருக்கு தனிப்பட்ட முறையில் உறுதியளித்திருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், கனடா நிதியமைச்சரான Bill Morneau, வரி செலுத்தும் பொதுமக்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும் என்பதால், இது குறித்து இன்னமும் ஃபெடரல் அலுவலகம் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதற்குமுன், பிரித்தானிய மகாராணியார், இளவரசர் வில்லியம் ஆகியோர் கனடாவுக்கு வந்திருந்தபோது அவர்களுக்கான பாதுகாப்பு செலவான சுமார் 2 மில்லியன் பவுண்டுகளை கனடா ஏற்றுக்கொண்டது.

ஆனால், ஹரி ராஜ குடும்பத்திலிருந்து பிரியும் பட்சத்தில், அவர்கள் முன்னாள் ராஜ குடும்ப உறுப்பினர்களாகிவிடுவதால், இவ்வளவு பெரிய தொகையை முன்னாள் ராஜ குடும்பத்தினருக்கு செலவிடுவதில் வரி செலுத்தும் கனடா மக்கள் விரும்புவார்களா என்பது தெரியவில்லை.
எனவே, கனடாவும் பாதுகாப்பு செலவை ஏற்றுக்கொள்வதிலிருந்து பின் வாங்கும் நிலையில், சுதந்திரமாக நிதியைக் கையாளவேண்டும் என்று விரும்பும் ஹரி, மேகன் தம்பதிக்கு, இது ஒரும் பெரும் பின்னடைவாக அமையக்கூடும்.
இது போதாதென்று, சட்டப்பூர்வமாக கனடாவில் வாழ விரும்பினால், ஹரியும் மேகனும் சாதாரண மக்களைப்போலவே அதற்கு விண்ணப்பிக்கவும் வெண்டியிருக்கும் என கனடா புலம்பெயர்தல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
மொத்தத்தில், விருந்தினர்களாக வாருங்கள், நிரந்தரமாக வாழ வேண்டுமானால் நீங்களும் சாதாரண மக்களாகத்தான் கருதப்படுவீர்கள் என்று கனடா கூறுவது போல் உள்ளது.

Leave a Reply