
தன் மீதான பதவி நீக்க தீர்மானத்தை உறுப்பினர்கள் நிராகரிக்க வேண்டும் என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்
ட்ரம்ப்பின் பதவி பறிப்பு தீர்மானம் செனட் சபைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள நிலையில், அவர் இந்த கருத்தை தனது டுவிட்டபர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது, ‘என் மீது எந்த ஆதாரமும் இல்லாமல் ஜனநாயக கட்சியினர் குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார்கள். அவர்களால் எந்த சாட்சியத்தையும் கொண்டு வர முடியவில்லை. மோசடியாக புகார் கூறுகிறார்கள். நாங்கள் நியாயத்துக்காக போராடுகிறோம் என்பது போல் பிரதிநிதிகள் சபை சபாநாயகரும், ஜனநாயக கட்சியினரும் கூக்குரலிடுறார்கள். அவர்களுடைய செயல் நியாயமற்றது. நாடாளுமன்ற வரலாற்றுக்கே களங்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.
நான் எந்த தவறும் செய்யாதபோது, என் மீது ஏன் களங்கம் இருக்க வேண்டும். இந்த குற்றச்சாட்டு விபரங்களை முழுமையாக படித்து பாருங்கள். அதில் எந்த தவறையும் கண்டுபிடிக்க முடியாது. இந்த தீர்மானத்தை உறுப்பினர்கள் நிராகரிக்க வேண்டும். புரளியாக கூறப்பட்ட இந்த குற்றச்சாட்டை தள்ளுபடி செய்வதை விட வேறு எதுவும் நடக்காது. என் மீது விசாரணைக்காவது செனட் சபை ஒப்புதல் வழங்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதுவும் நடைபெறாது’ என கூறினார்.
ஆளும் குடியரசு கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் மீது, எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி, இரண்டு குற்றச்சாட்டுகளை கூறி பதவி பறிப்பு தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்துள்ளது.
இந்த இரு தீர்மானங்களும் பிரதிநிதிகள் சபையில் கடந்த மாதம் 18ஆம் திகதி விவாதத்தில், டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்தார்.
அடுத்ததாக இந்த தீர்மானத்தை செனட் சபைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த தீர்மானம், இன்னும் ஒரு வாரத்தில் செனட் சபைக்கு அனுப்பப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. செனட் சபையில் 3இல் 2 பங்கு பேர் ஆதரவாக ஓட்டு வாக்களித்தால் தீர்மானம் நிறைவேறியதாக கருதப்படும்.
செனட் சபையில் ட்ரம்ப் கட்சியான குடியரசு கட்சிக்கே அதிக உறுப்பினர்கள் இருக்கிறார்கள். எனவே, அங்கு தீர்மானம் நிறை வேறுவதற்கு வாய்ப்பு மிக குறைவாக உள்ளது. இதனால் ட்ரம்ப் பதவி பறிபோகாது என்றே கருதப்படுகிறது.
Leave a Reply