
அமெரிக்க – ஈரான்பதற்றம் எவ்விதத்திலும் இலங்கைக்கு அச்சுறுத்தலாக அமையாது என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அவ்வாறு அழுத்தங்கள் ஏற்படுத்துவதற்கான காரணியும் இல்லையென தெரிவித்த இராணுவத் தளபதி, இலங்கை மிகச் சிறிய நாடு என்பதால் சர்வதேச பிரச்சினைகளில் தலையிடாது சுமுகமாகச் செயற்படுவதே சிறந்த வழியென்றும் குறிப்பிட்டார்.
களனி ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அமெரிக்கா- ஈரான் பதற்றம் உக்கிரமடைந்து வருகின்ற நிலையில், அமெரிக்காவுடன் இலங்கை செய்துகொண்ட ஒப்பந்தங்களில் ஏதேனும் நெருக்கடிகள் ஏற்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், “இல்லை. அவ்வாறு எந்தச் சந்தர்ப்பத்திலும் நெருக்கடிகள் ஏற்படாது. அவ்வாறு ஏற்படுவதற்கு ஏதுவான காரணகங்ளும் இல்லை. சுமார் 2 இலட்சத்துக்கும் அதிகமான இலங்கை மக்கள் வெளிநாடுகளில் தொழில் புரிகின்றனர். சில நாடுகளுக்கு இடையில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதால், பணிபுரிபவர்களுக்கு சிக்கல்கள் ஏற்படலாம் என்ற நிலைமை ஏற்பட்டது. எனினும் அவை உரிய நேரத்தில் தீர்க்கப்பட்டுள்ளன.
மேலும் பிரச்சினைகள் ஏற்படலாம் என நாம் எண்ணவில்லை. எமது நாடு மிகச் சிறியது. எனவே நாம் எந்தப் பிரச்சினையிலும் தலையிடாது சுமுகமாக செயற்பட வேண்டும்.
மேலும் அமெரிக்க – ஈரான் மோதல் இலங்கைக்கு எவ்விதத்திலும் அழுத்தங்களோ, அச்சுறுத்தல்களும் ஏற்படுத்தாது” என மேலும் தெரிவித்தார்.
Leave a Reply