
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திற்கு வருகை தந்த 65 பேரில் 52 பேர் சஜித்துக்கே ஆதரவு வழங்கியுள்ளனரென நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
சிறிகொத்தவில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கூட்டம் தொடர்பாக மேலும் கூறியுள்ளதாவது, “கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்தை அறிவதற்கு விருப்புக் குறித்த கணிப்பீடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது கூட்டத்துக்கு சமூகமளித்திருந்த 65 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 52 பேர் சஜித்துக்கு தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் என்ற கருத்தையே முன்வைத்துள்ளனர்.
எனவே கட்சியிலுள்ள பெரும்பான்மையினரின் கருத்துக்கு மதிப்பளித்து, தேவையான நடவடிக்கைகளை கட்சியின் சட்டத்தின்படி மேற்கொள்ள மத்திய செயற்குழுவையும், கட்சி மாநாட்டையும் கூட்ட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply