
தனது புதுக் காதலியுடன் இந்தியா வந்த அமேசான் நிறுவனருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் நிறுவனரான ஜெப் பெசோஸ், தனது புது காதலியாகிய லாரன் சான்ஷெஸ் உடன் மூன்று நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை புரிந்தார்.
ஆனால், சில்லறை வியாபார வர்த்தகர்கள் ’ஜெப் பெசோஸ் திரும்பிப்போ’ என்னும் வாசகம் அடங்கிய பதாகைகளுடன் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தியாவில் சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் டிஜிட்டல் மயமாக அமேசான் நிறுவனம் படிப்படியாக 100 கோடி டாலர் முதலீடு செய்யத் திட்டமிட்டிருப்பதாக பெசோஸ் அறிவித்துள்ளார்.
21ம் நூற்றாண்டு இந்தியாவுக்கான நூற்றாண்டாக இருக்கும் என்று கூறிய அவர், இந்த நாடு விஷேசமான ஒன்றைக் கொண்டிருக்கிறது, அது ஜனநாயகம் என்றார்.

2025 வாக்கில் அமேசான் நிறுவனம் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்ய இருப்பதாகவும், ஏற்கனவே இந்தியாவில் 5.5 பில்லியன் டாலர் முதலீட்டை கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள், ஆன்லைனில் செயல்பட்டு, விற்பனை செய்யும் வகையில், அவை டிஜிட்டல்மயமாக 100 கோடி டாலர்களை படிப்படியாக முதலீடு செய்ய இருப்பதாகவும் பெசோஸ் தெரிவித்தார்.
அமேசான் நிறுவனம் இந்தியாவில் 100 நகரங்கள், கிராமங்களில் டிஜிட்டல் குடில்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது.

இ-காமர்ஸ் தொடர்பான பலவித வசதிகளையும், சேவைகளையும் இந்த டிஜிட்டல் குடில்கள் வழங்கும்.
இதனிடையே, அமேசான் நிறுவனம் தள்ளுபடிச் சலுகை அளித்து குறைந்த விலையில் ஆன்லைனில் பொருட்களை விற்பதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக எதிர்ப்பு தெரிவித்து, சில்லரை வியாபார வர்த்தகர்கள் பல இடங்களில் அமேசான் நிறுவனர் வருகையை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.
ஆனால், அமேசான் நிறுவனம் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
Leave a Reply