
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு வழங்கப்பட்ட பிணை உத்தரவுக்கு எதிராக, சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனு மீதான நீதிமன்றின் தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று(வெள்ளிக்கிழமை) முன்னிலையானார்.
வெள்ளை வான் ஊடக சந்திப்பு விவகாரம் தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் திகதி, கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து ராஜித சேனாரத்ன கடந்த 30ஆம் திகதி, கொழும்பு பிரதம நீதவானினால் பிணையில் விடுவிக்கப்பட்டார். குறித்த பிணை உத்தரவுக்கு எதிராக, சட்டமா அதிபரினால் மீளாய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
பிணை உத்தரவில் குறைபாடு காணப்படுவதாகவும், இதன்காரணமாக அதனை செல்லுபடியற்றதாக்குமாறு கோரியும், சட்ட மா அதிபர் குறித்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையிலேயே குறித்த மனு மீதான விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றது.
இதன்போதே அது குறித்த தீர்மானத்தை எதிர்வரும் 21ஆம் திகதி வெளியிடுவதாக கொழும்பு மேல் நீதிமன்றநீதிபதி மஞ்சுள திலகரட்ன அறிவித்துள்ளார்.
Leave a Reply