
அனைத்துவித ஒப்பந்தங்களும் நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றால் அவற்றை மீளாய்வு செய்வதே புதிய அரசாங்கத்தின் கொள்கையாகும் என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இலங்கை மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்ததன் பின்னர் ஏற்பட்டுள்ள நம்பிக்கையானது எமது எதிர்பார்ப்பாக உள்ளது.
அவருடன் பேச்சு நடத்த ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள், அமெரிக்க இராஜாங்க செயலாளர், பிரித்தானியாவின் விசேட பிரதிநிதி ஆகியோர் எமது நாட்டிற்கு ஒரே தினத்தில் விஜயம் செய்திருந்தனர்.
இதன் கௌரவமானது இலங்கைக்கு உரித்தாகும். இவ்வாறு ஒரே தினத்தில் யாரும் இதற்கு முன் வந்ததில்லை. ஜனாதிபதியின் திட்டம், அதற்கான ஒத்துழைப்பு என்பன குறித்து கலந்துரையாடப்பட்டன.
நாட்டின் பாதுகாப்பு, அபிவிருத்தி குறித்து பேசப்பட்டது. பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்து பேசப்பட்டன. அனைத்துவித ஒப்பந்தங்களும் நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றால் அவற்றை மீளாய்வு செய்வதே புதிய அரசாங்கத்தின் கொள்கையாகும்.
அதனால் மீளாய்வு முடியும்வரை அதுகுறித்த முடிவை அறிவிக்கமுடியாது. இப்போதும் அமைச்சரவையின் துணைக்குழு நியமிக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் அந்நாட்டு அரசியலில் மிகவும் பலம்மிக்கவர். புதிய அரசாங்கம் மற்றும் புதிய ஜனாதிபதி முன்னெடுத்துவரும் திட்டம் குறித்தே அவர் வந்து பேசினார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply