
தமிழகத்தில் திருமணமான 4 மாதத்தில் கர்ப்பிணி பெண் உயிரிழந்த நிலையில் அவரை விஷம் வைத்து கொன்று விட்டதாக கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சித்தேரியை சேர்ந்த பழனிவேல் என்பவர், ராஜேஸ்வரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார்.
ராஜேஸ்வரி கர்ப்பம் அடைந்த நிலையில் அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவரை கணவர் வீட்டார் கவனித்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ராஜேஸ்வரியை அவரது பெற்றோர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில், கடந்த 14ஆம் திகதி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
அவரை கணவர் வீட்டார் விஷம் கொடுத்து கொன்றுவிட்டதாக கூறி ராஜேஸ்வரி குடும்பத்தார் உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டம் செய்து வருகிறார்கள்.
அவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு 3 நாட்கள் கடந்து விட்ட நிலையில், ஆர்.டி.ஓ அதிகாரிகள் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
இது குறித்து ராஜேஸ்வரியின் பெரியப்பா செல்வராஜ் கூறுகையில், நாங்கள் பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.
ஆனால் பழனிவேல் குடும்பம் கேட்டு கொண்டதால் ராஜேஸ்வரியை அவருக்கு திருமணம் செய்துகொடுத்தோம். ராஜேஸ்வரியை அவர்கள் சித்ரவதை செய்து விஷம் கொடுத்துக் கொலை செய்துவிட்டார்கள்.
திருமணம் ஆன ஒரு மாதத்திலேயே பிரச்னை செய்யத் தொடங்கினார்கள். ராஜேஸ்வரியின் தட்டு, டம்ளர் உட்பட அவள் பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களையும் கொண்டுபோய் மாட்டுக் கொட்டகையில் வைத்திருக்கிறார்கள். மாட்டுக் கொட்டகையில் படுக்கவும் வைத்திருக்கிறார்கள்.

இதனால் அவர்களிடம் கோபித்துக்கொண்டு ராஜேஸ்வரி பாப்பநாயக்கன்பட்டிக்கு வந்துவிட்டார். நான் ராஜேஸ்வரியை சமாதானம் செய்தபோது, ‘பெரியப்பா, அங்கு வாழ முடியாது. பழனிவேல், அவங்க அம்மா, அப்பா எல்லோரும் என்னை சாதி பெயரைச் சொல்லி கொடுமை செய்கிறார்கள்’ என்று சொல்லி அழுதாள்.
என் தம்பி உள்ளாட்சித் தேர்தலுக்கு ஓட்டுப் போடுவதற்காக ராஜேஸ்வரியை கூட்டிவருவதற்கு பழனிவேல் வீட்டுக்குச் சென்ற போது அவருடைய பெற்றோர், ராஜேஸ்வரி வாயும் வயிறுமா இருக்கு. ஓட்டு போட கூட்டிட்டுப் போகவேண்டாம்’ என்றார்கள். அப்போது ராஜேஸ்வரியிடம் பேசும்போது, ‘நான் கர்ப்பம் தரிப்பதற்காகக் காலையும் மாலையும் மருந்து கொடுக்கிறார்கள் என்று கூறி அழுதிருக்கிறாள். மகளை சமாதானம் செய்துவிட்டுத் திரும்பி வந்திருக்கிறார்.
ஒரு வாரத்திற்கு முன்பு, வயிற்று வலின்னு சொல்லி ராஜேஸ்வரியை ஆத்தூர் மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார்கள்.
அதையடுத்து, என் தம்பி குடும்பத்தினர் மருத்துவமனைக்குப் போன பிறகு, பழனிவேலின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கே வரவில்லை. மருத்துவர்கள் விஷம் குடித்திருப்பதாகச் சொன்னார்கள்.
ஆனால் ராஜேஸ்வரி, நான் விஷம் குடிக்கவில்லை. அவர்கள் எனக்கு தெரியாமல் விஷம் கலந்து கொடுத்திருப்பார்கள் என்று கூறி அழுதாள். இந்நிலையில், தான் அவள் இறந்துவிட்டாள். நிச்சயமாக, பழனிவேலின் குடும்பத்தார் சாதி வெறியோடு சித்ரவதை செய்து விஷம் கலந்து கொடுத்து கொன்றிருக்கிறார்கள் என கண்ணீரோடு கூறியுள்ளார்.

Leave a Reply