
வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களுக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (வெள்ளிக்கிழமை) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் கட்சியின்; செயலாளரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, வடக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் காணிப்பிரச்சினைகள் பற்றி ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரால் கலந்துரையாடப்பட்டது
இதற்கு பதிலளித்த வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் பல்வேறுபட்ட காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நீதிபதி தலைமையில் மூவர் அடங்கிய ஆணைக்குழு ஒன்று விரைவில் நியமிக்கப்பட இருக்கின்றது எனவும் அதனூடாக பொதுமக்கள் தமக்கு இருக்கும் பல்வேறுபட்ட காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்றும் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரிய வளப் பங்கீட்டில் (ஆசிரியர் சமப்படுத்தல்) பாரிய குறைபாடுகள் நிலவுகின்றது எனவும் குறிப்பாக கிராமப்புறத்தில் உள்ள பாடசாலைகளுக்கு ஆரம்ப, கனிஸ்ட, உயர்தர பிரிவுகளுக்கு ஆசிரியப் பற்றாக்குறை காணப்படுகிறது.
உதாரணமாக செட்டிகுளம் கோட்டப்பாடசாலைகளில் 94 ஆசியரியர்களுக்கான வெற்றிடமும், வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் 158 ஆசிரிய வெற்றிடமும் காணப்படுகின்றது எனவும் இடமாற்றம் பெற்றுச் செல்லுகின்ற ஆசிரியர்களுக்கு பதிலீடாக ஆசிரியர்கள் மீள்நியமனம் செய்வதில் பல நெருக்கடிகள் இருப்பதாகவும் இதனால் மாணவர்களுடைய கல்வியில் இவ்விடயம் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
இதற்கு வடக்கு ஆளுநர் உரிய நடவடிக்கை எடுப்பதாக சந்திப்பில் கலந்து கொண்வர்களிடம் உறுதியளித்தார்.
வடக்கு மாகாணத்தில் சுத்தமான குடிநீர் தேவைக்கும் விவசாயத்திற்கும் புதிய நீர்தேக்கங்களை உருவாக்குவதைப் பற்றி இச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக மன்னார் மாவட்ட விவசாயிகளினால் நீண்டகால கோரிக்கையான கூராய் ஆற்று நீரை மறித்து நெற் செய்கைக்கு பயன்படுத்துவது, வவுனியா மாவட்டத்தில் உள்ள பறங்கியாற்றின் மேலதிக நீரை 14 குளத்தில் சேமித்து விவசாயத்திற்கு பயன்படுத்துவது யாழ். குடா நாட்டில் இருக்கும் சிறிய குளங்களை புனரமைப்புச் செய்தல் மற்றும் வடக்கு மாகாணத்தில் இருக்க கூடிய நீர்நிலைகளை இனங்கண்டு புனர்நிர்மானம் செய்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
Leave a Reply