விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்!

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள் இரண்டாவது நாளாக இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லியை நோக்கி பேரணியை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது விவசாயிகள் ஹரியானாவில் அமைக்கப்பட்டிருந்த சாலை தடுப்புகள், தடைகளைத் தாண்டி, பேரணியை தொடர்ந்தமையால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் ஹரியானா மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லிக்கு பேரணி செல்லும் போராட்டத்தை பஞ்சாபைச் சேர்ந்த விவசாய சங்கங்கள் அறிவித்தன.
இதன்படி ‘பாரதிய கிசான் யூனியன்’ என்ற பெயரில் 30க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இணைந்து இரண்டு நாள் பேரணி போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. குறித்த பேரணி நேற்று ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.