Yarl கதிர்

இணைய பத்திரிகை

ஆசிய பதினொருவர் நட்சத்திர அணியில் விளையாட முக்கிய இந்திய வீரர்களுக்கு அழைப்பு!

ஒட்டுமொத்த கிரிக்கெட் இரசிகர்களையும் கொண்டாட வைக்கும் வகையில், ஆசிய பதினொருவர் நட்சத்திர அணிக்கும் உலக பதினொருவர் நட்சத்திர அணிக்குமிடையிலான போட்டித் தொடரொன்றை நடத்த, பங்களாதேஷ் கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளமை யாவரும் அறிந்த விடயமே.

இந்த நிலையில், ஆசிய பதினொருவர் நட்சத்திர அணிக்காக விளையாடுவதற்கு இந்திய வீரர்களான டோனி, விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா, ஜஸ்பிரிட் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், ரவீந்திர ஜடேஜா ஆகியோரை அனுமதிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு, பங்களாதேஷ் கிரிக்கெட் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

எனினும் இப்போட்டியில் டோனி பங்கேற்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலகக்கிண்ண தொடரில் நியூஸிலாந்து அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில், டோனி இறுதியாக விளையாடி இருந்தார்.

தற்போது இந்தியா இராணுவத்துடன் நேரத்தை செலவிட்டுவரும் டோனி, எப்போது மீண்டும் அணிக்கு திரும்புவார் என்பது குறித்து இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு இல்லை. ஆகையால் ஆசிய பதினொருவர் நட்சத்திர அணிக்காக அவர் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரி-20 போட்டியாக நடைபெறவுள்ள இத்தொடரில் இரண்டு போட்டிகள் நடைபெறும் எனவும், அடுத்த வருடம் மார்ச் மாதம் குறித்த போட்டிகள் நடைபெறும் எனவும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

பங்களாதேஷ் நாடானது 1971ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் திகதி பாகிஸ்தானிலிருந்து பிரிந்து ஒரு தனி நாடாக உருவாகுவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் ஷேக் முஜீபுர் ரஹ்மான் எனும் தனி மனிதனாகும். 1920ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி பிறந்த இவர் பங்களாதே{க்கு தனியான சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்துவிட்டு 1975ஆம் ஆண்டு தனது 55 ஆவது வயதில் காலமானார்.

இந்நிலையில் அடுத்த வருடம் ஷேக் முஜீபுர் ரஹ்மான் எனும் சுதந்திர போராட்ட வீரர் பிறந்து 100 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது. எனவே 100 ஆண்டுகள் நிறைவு நிகழ்வை மிகவும் கோலாகலமான முறையில் நடாத்துவதற்கு பங்களாதேஷ் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இதன் ஒரு கட்டமாகவும். அரசின் வேண்டுகோளுக்கு இணங்கவும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையானது இவ்வாறு ஷேக் முஜீபுர் ரஹ்மான் அவர்களின் 100 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இரு போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை ஏற்பாடு செய்துள்ளது.

ஆசிய பதினொருவர் அணி என்பது, சர்வதேச கிரிக்கெட் சபையினால் அந்தஸ்து பெற்று கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடுகின்ற ஆசிய அணிகளான இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற அனைத்து அணிகளிலிருந்தும் திறமைவாய்ந்த 11 வீரர்களை கொண்டமைந்த அணியாகும்.

அதே போன்று உலக பதினொருவர் அணி என்பது சர்வதேச கிரிக்கெட் சபையினுடைய அந்தஸ்து கொண்டுள்ள ஆசிய அணிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அணிகளினுடைய 11 வீரர்களை கொண்டமைந்த அணியாகும்.

மேலும் குறித்த அணிகளில் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெற்ற நட்சத்திரங்களும் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்தொடரின் முதல் போட்டி எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் திகதியும், இரண்டாவது போட்டி மார்ச் மாதம் 21ஆம் திகதியும் நடைபெறவுள்ளன. இரண்டு போட்டிகளுமே மிர்புரில் நடைபெறுகின்றன.

டெஸ்ட், ஒருநாள், ரி-20, ஒவ்வொரு நாடுகளுக்குமான தனித்துவமான ரி-20 தொடர், 10 ஓவர்கள் கொண்ட போட்டி என பல்வேறு போட்டிகளை பார்த்து இரசித்த இரசிகர்களுக்கு, இப்போட்டித் தொடர் புதுவிதமான அனுபவத்தை கொடுக்கவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!