Yarl கதிர்

இணைய பத்திரிகை

இந்திய சுற்றுலாத்துறை பிரதிநிதிகளுக்கும் ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு

சென்னைக்கு இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ள ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், இந்திய பயண முகவர் சங்கத்தின் அகில இந்திய மற்றும் தமிழ்நாட்டு பிரதிநிதிகளை நேற்று (12) பிற்பகல் சென்னையில் சந்தித்தார்.

41 வருடங்களுக்கு பின்னர் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதுடன் ,சென்னைக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வடமாகாணத்தின் சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி தொடர்பில் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் சுற்றுலாத்துறையில் ஆர்வத்துடன் செயற்பட்டுவரும் இந்திய பயண முகவர் சங்கத்தின் பிரதிநிதிகளை வடமாகாணத்தின் சுற்றுலாத்துறையினை வளர்ப்பதற்கு உதவுமாறு ஆளுநர் இதன்போது கோரிக்கை விடுத்தார். தமிழ் நாட்டிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் சுற்றுலாப்பயணிகளை சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வருவது தொடர்பிலும், சுற்றுலாத்துறை மற்றும் கலாச்சார சமய இடங்களை இனங்காணுவது தொடர்பிலும் கவனம் செலுத்துவதாக பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

மேலும் இதுதொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வடமாகாணம் தயாராக இருப்பதாகவும் இது தொடர்பில் ஆராய்வதற்கான தூதுக்குழு ஒன்றினை வடமாகாணத்திற்கு வருமாறு ஆளுநர் இதன்போது அழைப்பு விடுத்தார். 

இந்த விஜயத்தின்போது ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் மற்றும் தி.மு.க தலைவரும் தமிழ்நாடு சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.கே.ஸ்ராலின் இடையிலான சந்திப்பு சென்னையில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது ஆளுநர் இலங்கைக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையிலும், வடமாகாணத்திற்கும் தமிழ் நாட்டுக்கும் இடையிலும் புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு வடமாகாண ஆளுநர் என்ற ரீதியில் தனக்கு இருப்பதாக குறிப்பிட்டார். 

அடுத்து பாரதிராஜா சர்வதேச திரைப்பட பயிற்சிக் கல்லூரிக்கு ஆளுநர் விஜயம் செய்து இயக்குனர் பாரதிராஜாவுடன் சுமூக கலந்துரையாடலை மேற்கொண்டார். வடமாகாணத்தில் திரைப்படத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு பாரதிராஜா சர்வதேச திரைப்பட பயிற்சிக் கல்லூரியூடாக திரைக்கலை பயிற்சியினை வழங்குமாறு ஆளுநர் இயக்குனர் பாரதிராஜாவிடம் கோரிக்கையினை முன்வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!