Yarl கதிர்

இணைய பத்திரிகை

இன்று இரவு முதல் கன மழை பெய்ய வாய்ப்பு – மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை

இலங்கைக்கு தெற்காக விருத்தியடைந்த குறைந்தமட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்று (புதன்கிழமை) இரவிலிருந்து (குறிப்பாக டிசம்பர் 04ஆம், 05ஆம் திகதிகளில்) அதிகரிப்பு ஏற்படும் என அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேலும் நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு, நுவரெலியா, பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் சில இடங்களில் 150 மி.மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் மேல் மாகாணங்களிலும் மாத்தளை, கண்டி, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் அனுராதபுரம், பொலன்னறுவை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி, கம்பஹா, களுத்துறை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும், குறிப்பாக வடமேல், தென், மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!