Yarl கதிர்

இணைய பத்திரிகை

சட்டவிரோதமாக மாடு அறுத்து இறைச்சியாக்கிய சந்தேகநபர்கள் மூவர் வவுனியாவில் கைது

வவுனியாவிலுள்ள வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் மாடு அறுத்து, இறைச்சியாக்கி அதனை விற்பனை செய்வதற்கு முயன்ற சந்தேகநபர் மூவரை வவுனியா பிராந்திய போதை ஒழிப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மதீனாநகர் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமான முறையில் மாடுகள் அறுத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதனடிப்படையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 5 மணியளவில் அப்பகுதியில் பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பினை மேற்கொண்டபோது, சட்டவிரோதமான முறையில் மாடு அறுத்த சந்தேகநபர் மூவருடன் 82.750 கிலோ கிராம் இறைச்சியையும் இறைச்சி வெட்டுவதற்கு தயாராக இருந்த மாடு ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இப்பகுதியில் தொடர்ச்சியாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் மாடு அறுத்து விற்பனை செய்யப்பட்டு வருவதும் தற்போது பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் கைப்பற்றப்பட்ட இறைச்சிகளையும் சந்தேகநபரையும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!